பிரான்சுடனான தூதரக உறவை முறித்தது புர்கினா பாசோ : பதிலடி கொடுக்க பிரான்ஸ் பரிசீலனை
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோ, தனது முன்னாள் ஆதிக்க நாடான பிரான்சுடனான தூதரக உறவுகளை அதிகார பூர்வமாக துண்டித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.
பாதுகாப்பு, நாட்டின் இறையாண்மை மற்றும் உள்விவகாரங்களில் வெளிநாட்டுத் தலையீடு போன்ற காரணங்களால் இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்து வந்த கசப்பான சூழலைத் தொடர்ந்து, இந்த உறவு முறிவு வெள்ளிக்கிழமை முதல் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதாக புர்கினா பாசோவின் செய்தித் தொடர்புத் துறை அமைச்சர் கில்பர்ட் ஔட்ராகோ தெரிவித்துள்ளார்.
அரசியல் மற்றும் பாதுகாப்புத் தேக்கநிலை
மேலும், பிரான்ஸ் அரசு தங்கள் நாட்டுக்கு எதிராகச் செயல்படும் "சதி வலைப்பின்னல்கள்" மற்றும் "பயங்கரவாதிகளுக்கு" ஆதரவளிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

புர்கினா பாசோவின் இந்த அதிரடி முடிவுக்கு பிரான்ஸ் அரசு கடும் வருத்தம் தெரிவித்துள்ளது. இது எவ்வித ஆதாரமும் இல்லாத, விரோதமான முடிவு என்றும், புர்கினா பாசோ அதிகாரிகளின் கவலைக்குரிய போக்கை இது காட்டுவதாகவும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாகப் புர்கினா பாசோவிற்கு எதிராகப் பரஸ்பர நடவடிக்கைகளை எடுப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாகக் கூறியுள்ள பிரான்ஸ், அங்கு வசிக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த பத்தாண்டுகளாக மாலி நாட்டிலிருந்து பரவி, ஆயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்கும் இலட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வுக்கும் காரணமான இஸ்லாமிய தீவிரவாத கிளர்ச்சியைக் கட்டுப்படுத்தப் போராடி வரும் புர்கினா பாசோவில், இந்த புதிய தூதரக முறிவு மேலும் அரசியல் மற்றும் பாதுகாப்புத் தேக்கநிலையை உருவாக்கியுள்ளது.