ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் அனுப்பிய கடிதம்.. அமைச்சர் வெளியிட்ட உத்தியோகபூர்வ தகவல்!
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசியலமைப்புத் திருத்தம் பொருத்தமற்றது எனத் தெரிவித்து மகாநாயக்க தேரர்களினால் அனுப்பப்பட்ட கடிதம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்குக் கிடைத்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ உறுதிப்படுத்தினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (11) நடைபெற்ற போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
குறித்த கடிதம் கிடைத்ததைத் தொடர்ந்து, தாமும் நீதி அமைச்சரும் மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து நிலைமைகள் குறித்து தெளிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
நீதியரசர்களின் ஓய்வு வயது நீட்டிப்பு..
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதிச்சேவைச் சட்டத் திருத்தம் ஆகியவற்றை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு முன்னதாகவே, மகாநாயக்க தேரர்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த விடயங்கள் தொடர்பில் தமது தரப்பு விளக்கங்களை முன்வைத்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், மல்வத்து, அஸ்கிரிய மற்றும் ராமன்ன மகா நிகாயக்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து உண்மைகளை விளக்கியதாக அவர் கூறினார்.
இதற்கிடையில், கடந்த 4ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் தங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என தெரிவித்தார்.
இந்நிலையில், அதற்கு முன்னாளே, தாமும் நீதி அமைச்சரும் மல்வத்து, அஸ்கிரிய மற்றும் ராமன்ன பிரிவுகளின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்துத் தெளிவுபடுத்தியதாக அவர் தற்போது கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.