வடக்கு மாகாணத்தில் உள்நாட்டு உற்பத்தியின் பங்கு குறைவாகவே உள்ளது - ஆளுநர் விசனம்
உள்நாட்டுப் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பு குறைவாகவே காணப்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம்(23.07.2026) ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இலங்கையின் தேசிய உற்பத்தியில் வடக்கு மாகாணத்தின் பங்களிப்பைக் கணிசமான அளவில் அதிகரிப்பது தொடர்பாக துறைசார் வல்லுநர்கள் மற்றும் பங்குதாரர்களுடனான விசேட கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தேசிய பொருளாதார வளர்ச்சி
தற்போது இலங்கையின் தேசிய பொருளாதார வளர்ச்சி இலக்கு 7 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், வட மாகாணம் தனது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு 10 சதவீத வளர்ச்சியை எட்டுவதை முக்கிய இலக்காகக் கொண்டு அதற்குரிய செயற்பாடுகளை ஆரம்பித்திருப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில், 2019ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா பெருந்தொற்று மற்றும் 2022ஆம் ஆண்டின் பொருளாதார வீழ்ச்சி போன்ற காரணங்களால் பொருளாதாரத் தரவுகளில் பல ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டமையை ஆளுநர் சுட்டிக்காட்டியயுள்ளார்.
மேலும் வட மாகாணத்தில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்குக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய துறைகள் தொடர்பிலும் அவர் விரிவாகக் கலந்துரையாடியுள்ளார்.
விவசாயம் மற்றும் கடற்றொழில்
இதன்போது பின்வரும் முக்கிய துறைகள் மற்றும் அவற்றுக்கான திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன:
நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்குப் புதிய காணிகளைத் தேடுவதை விட, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித் தற்போதைய உற்பத்தியின் வினைத்திறனை அதிகரிப்பதில் அதீத கவனம் செலுத்தப்பட வேண்டும்.
சிறுதானியங்கள், பயறு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியை விரிவுபடுத்துவது அவசியமாகும். மேலும், பால் மற்றும் இறைச்சி உற்பத்தியை அதிகரிப்பதன் ஊடாக, பால் மா இறக்குமதிக்காகச் செலவிடப்படும் சுமார் 400 மில்லியன் டொலர்களை மீதப்படுத்த முடியும்.

அறுவடை செய்யப்படும் விவசாயப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்யாமல், அவற்றை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக இலாபத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும்.
வட மாகாணத்தின் பொருளாதாரத்தில் கடற்றொழில் சுமார் 3.7 சதவீத பங்களிப்பை வழங்குகின்றது. கடல் மீன்பிடி, நன்னீர் மீன்பிடி மற்றும் கடல் அட்டை வளர்ப்பு போன்றவற்றை மேலும் ஊக்குவிப்பது முக்கிய தேவையாகும்.
தகவல் தொழில்நுட்பம் 1.12 சதவீதமும், சுற்றுலாத்துறை 0.3 சதவீதமும் என இத்துறைகளின் தற்போதைய பொருளாதாரப் பங்களிப்பு மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. இந்தத் துறைகளை மேம்படுத்துவதற்குப் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அரச-தனியார் துறை பங்குபற்றல் மிகவும் அவசியமாகின்றது.
டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட தரவுகள்
வட மாகாணத்தில் ஆண்டு முழுவதும் கிடைக்கும் சூரிய ஒளியைப் பயன்படுத்தி, அரச கட்டடங்களில் கூரை மேல் சூரிய சக்தித் தகடுகளை பொருத்துதல் மற்றும் மின்கல சேமிப்பு அமைப்புகளை நிறுவுவதன் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்கலாம்.
அதிக விளைச்சல் ஏற்படும் காலங்களில் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்பதோடு, இடைத்தரகர்களே அதிக இலாபம் பெறுகின்றனர்.
இதற்குத் தீர்வாகப் பெறுமதி சேர் மையங்களை நிறுவுதல் மற்றும் கூட்டுறவு அமைப்புகளைப் பலப்படுத்துதல் அவசியமாகும். மேலும், சரியான திட்டமிடலுக்குத் தற்போதைய பொருளாதாரத் தரவுகள், குறிப்பாக டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட தரவுகள் மிகவும் அவசியமாகும்.

அத்துடன், நவீன விவசாய தொழில்நுட்பங்கள் குறித்து சுமார் 800 இளம் விவசாயிகளுக்குப் பயிற்சி வழங்குவதற்கான திட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும்.
விவசாயம், கடற்றொழில், கால்நடை மற்றும் சிறு கைத்தொழில் என அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு துறைக்குமான விரிவான திட்ட அறிக்கைகள் மற்றும் முதலீட்டு முன்மொழிவுகளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துக்குள் தயாரித்து நிதி ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிப்பட வேண்டும் என இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட கலந்துரையாடலில், வட மாகாண ஆளுநரின் செயலாளர், வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாயப் பீடாதிபதி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானப் பீடத்தின் கணிதம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.