வடக்கில் கதவடைப்பு : விஜய்யின் திரைப்படத்தை நிறுத்தக்கோரி போலி கடிதம் (Photos)
வடக்கு - கிழக்கு பகுதிகளில் எதிர்வரும் 20ஆம் திகதி நிர்வாக முடக்கல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அன்று தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய்யின் லியோ படத்தை நிறுத்தக் கோரி தமிழ் கட்சிகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக போலியான கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
எனினும், அந்த கடிதம் போலியானது என்றும், இது பழைய கடிதங்களில் இருந்து கையொப்பங்களை எடுத்து போலியாக தயாரிக்கப்பட்ட கடிதம் என்றும் தமிழ் கட்சித் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கதவடைப்பு போராட்டம்
இதேவேளை, வடக்கு கிழக்கு முழுவதும் எதிர்வரும் 20 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள
நிர்வாக முடக்கத்திற்கு ஆதரவு கோரி யாழில் இன்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
இதற்கமைய யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலி மற்றும் மருதனார் மடம் சந்தைகளில் முதற்கட்டமாக இன்று (18.10.2023) காலை துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு முழுவதும் விநியோகம்
இதன்போது புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் தமிழ்க் கட்சிகளினால் இந்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளதாகவும் கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து அழைப்பு விடுத்துள்ள இந்த நிர்வாக முடக்கத்திற்கு ஆதரவு வழங்க கோரி வடக்கு கிழக்கு முழுவதும் துண்டுப் பிரசுர விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வவுனியாவிலும் துண்டுபிரசுங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
துண்டுபிரசுர விநியோகத்தின் போது வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நகரசபை தலைவர் இ.கௌதமன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ. மயூரன், முன்னாள் நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் என பலரும் கலந்து கொண்டு செயற்பாட்டினை முன்னெடுத்திருந்தனர்.
செய்தி-திலீபன்
போலியான கடிதம்
இதேவேளை நிர்வாக முடக்கத்தின்போது நடிகர் விஜய்யின் லியோ திரைப்பட காட்சிகளை இலங்கையில் நிறுத்த தமிழ் கட்சிகளின் தலைவர்கள் எழுதியதாக கூறப்படும் கடிதம் தொடர்பில் கட்சித் தலைவர்களிடம் கேட்டபோது,
“அவ்வாறு எந்த கடிதத்தையும் கோரிக்கையையும் நாம் யாருக்கும் அனுப்பவில்லை” என்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வேறு கடிதங்களில் உள்ள கட்சித் தலைவர்களின் கையொப்பங்களை பயன்படுத்தி குறித்த கடிதம் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
செய்தி- தீபன்