வட-கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கை
வடக்கு-கிழக்கில் சிவில் சமூகங்களின் பணியானது தற்போதைய கால கட்டத்தில் மிகவும் தேவையான ஒன்றாக காணப்படுகின்றது. எனவே சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,ஊடகவியலாளர்கள்,அறவழிப் போராட்டக்காரர்கள் ஆகியோரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது என வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதி ஜாட்சன் பிகிராடோ தெரிவித்துள்ளார்.
மன்னாரில் ஊடகங்களுக்கு நேற்று(16) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிவில் சமூகங்களின் பணி
அவர் மேலும் தெரிவிக்கையில்,“வடக்கு-கிழக்கில் சிவில் சமூகங்களின் பணியானது தற்போதைய கால கட்டத்தில் மிகவும் தேவையான ஒன்றாக காணப்படுகின்றது.
பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் அதாவது, கோவிட் பெருந்தொற்று உள்ளிட்ட ஏனைய அனர்த்தங்களாக இருக்கலாம், நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு சவால்களாக இருக்கலாம் இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை அரசுக்கு நிதி ஒரு தேவைப்பாடாக இருக்கலாம்.
பொருளாதார நெருக்கடி
அவ்வாறான ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இலங்கையில் மக்களுக்காக பணி செய்கின்ற சிவில் அமைப்புக்கள் பல லட்சம் ரூபாய் நிதிகளை இலங்கையின் பல பாகங்களிலும் மக்களுக்காக இலவசமாக வழங்கி வருகின்றனர். பொருளாதாரத்திற்கும், மீள் கட்டுமாணத்திற்காகவும் நிதியை நன்கொடையாக வழங்கி பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறு வடக்கு- கிழக்கில் மக்களுக்காக பணி செய்து வருகின்ற நிறுவனங்கள்,அமைப்புக்களை சந்தேகத்துடன் கவனிப்பது, அவர்களின் பணிகளில் தலையிடுவது, மற்றும் இடையூறுகளை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்வதும், மக்களுக்காக குரல் கொடுக்கும் நிறுவனங்களின் அலுவலகங்கள் இரவு நேரத்தில் கோழைத்தனமாக உடைக்கப்பட்டு அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் திருடப்படுகின்றமை மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது.
மக்களுக்காக மக்களுடன் பணியாற்றுகின்ற சிவில் சமூகத்திற்கு இந்த அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த நாட்டின் பொருளாதாரத்தில் அவர்களும் ஒரு பங்குதாரர்கள்.
பயங்கரவாத தடைச் சட்டம்
இந்த நாட்டின் சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கு அவர்களின் பங்கும் இன்றியமையாததொன்றாகும். இவ்வாறான விடயங்களில் சிவில் சமூகத்தினரையும் அரசு பாதுகாக்க வேண்டும்.
அதேபோன்று ஊடகவியலாளர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவர்களை சிறை வைப்பது என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஊடக தர்மத்துடன்
அவர்கள் வெளிக்கொண்டு வருகின்ற செய்திகள் அவர்கள் ஊடாகவே வெளி வருகிறது.அவர்களையும், அறவழிப் போராட்டக்காரர்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்த
அரசுக்கு உள்ளது.
எனவே இவ்வாறான விடயங்களை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் பாரதூரமான விளைவுகளை இந்த சமூகத்திற்கும்,ஏனையவர்களுக்கும் ஏற்படுத்தக்கூடும் என்பதை நாங்கள் மிகவும் கவலையாக தெரிவித்துக்கொள்கிறோம்.”என தெரிவித்துள்ளார்.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
