ஜனாதிபதி தேர்தல் குறித்து வடக்கு, கிழக்கு மக்களின் முடிவு: பரப்புரை கூட்டத்தில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
"வடக்கு மாகாண மக்களும், கிழக்கு மாகாண மக்களும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தத் தீர்மானித்து விட்டனர்." என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஹப்புத்தளையில் நேற்று (08) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்ற 'ரணிலால் முடியும்' வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
''சஜித் பிரேமதாசவால் அல்லது அநுரகுமார திஸாநாயக்கவால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையையும் கிடைக்கப்போவதில்லை. அவர்கள் இருவரும் பிரதமர்களாகக் கூட பதவி வகித்தவர்கள் இல்லை. இருவரும் முட்டாள்கள். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தான் நாட்டுக்கு நன்மை கிடைக்கும்.
வரிசை யுகத்துக்கு முற்றுப்புள்ளி
வரிசை யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒரே தலைவர் அவர்தான். இன்று வடக்கு மாகாண மக்களும், கிழக்கு மாகாண மக்களும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தத் தீர்மானித்து விட்டனர்.
ஊவா மாகாண மக்களும் ஒருபோதும் நன்றிக்கடன் மறப்பவர்கள் அல்லர். பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்ட ஜனாதிபதி பொருளாதாரம் மேலும் வலுவடையும்போது தோட்ட மக்களின் தேவைகள் பலவற்றையும் தீர்த்து வைப்பார்.
இன்று பதுளை வைத்தியசாலை வசதிகளை மேம்படுத்தித் தரவும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருக்கின்றார். எனவே, அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும்." - என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |