இந்திய - இலங்கை உறவை எவராலும் பிரிக்க முடியாது..! அமைச்சர் நளிந்த உறுதி
இந்திய - இலங்கை உறவு பல நூற்றாண்டுகளாகப் பேணப்பட்டு வருகின்றது. அண்டை நாடுகளாகவும் ஒரு குடும்பமாகவும் பிணைக்கப்பட்டுள்ளன. இந்த உறவை எவராலும் பிரிக்க முடியாது என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்காக இலங்கை - இந்திய சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாசார நிகழ்ச்சி இடம்பெற்றபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்திய - இலங்கை உறவு
மேலும் தெரிவிக்கையில், "சுதந்திர தினம் என்பது சுதந்திரத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல, ஜனநாயகம் மற்றும் முன்னேற்றத்தின் மதிப்புகளைப் பாதுகாக்க அயராது உழைத்த மக்களின் ஒற்றுமையை நினைவூட்டுகின்றோம்.
இலங்கையர்களாகிய நாம் இந்தியாவின் சாதனைகள் குறித்து மகிழ்ச்சியடைகின்றோம். இந்திய - இலங்கை உறவு பல நூற்றாண்டுகளாக பேணப்பட்டு வருகின்றது.
இலங்கையும் இந்தியாவும் அண்டை நாடுகளாகவும் ஒரு குடும்பமாகவும் பிணைக்கப்பட்டுள்ளன.
கலாசார நிகழ்ச்சிகள், கல்வி நடவடிக்கைகள் உட்பட பல துறைகள் மூலம் இந்த நட்பைப் பாதுகாப்பதில் இலங்கை - இந்திய சமூகம் மதிப்புமிக்க பங்கைக் கொண்டுள்ளது. நாட்டில் சவாலான காலங்களில், மனிதாபிமான உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு ஆதரவை வழங்கியுள்ளது.
நவீன யுகத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு பல துறைகளில் பரவியுள்ளது. இலங்கையின் வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழில்கள் மற்றும் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது.
2500 ஆண்டுகளுக்கும் மேலானவை
எதிர்வரும் ஆண்டுகளில், வர்த்தகம், கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் கலாசார பரிமாற்றம் ஆகிய துறைகளில் நாம் தொடர்ந்து உறவுகளை உருவாக்க வேண்டும்.
முக்கியமாக, பல நூற்றாண்டுகளாக நம்மை வழிநடத்தி வரும் நம்பிக்கை, மரியாதை மற்றும் நட்பின் மதிப்புகளை நாம் தொடர்ந்து வளர்க்க வேண்டும்.
இந்தச் சந்தர்ப்பம் இந்தியாவின் சுதந்திரத்தைக் கொண்டாடுவது மட்டுமல்ல, இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும், 79ஆவது சுதந்திர தினத்தன்று, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பிரிக்க முடியாத பரஸ்பர உறவு மற்றும் ஒத்துழைப்புப் பயணத்தில் இந்தியக் குடியரசுக்கு இலங்கை தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி பங்காளியாக உள்ளது.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான இன மற்றும் கலாசார உறவுகள் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கும் மேலானவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



