வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஓ எம்பி அலுவலகம் வேண்டாம் என வலியுறுத்தல்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஓஎம்பி அலுவலகம் வேண்டாம் என சர்வதேசத்திற்கு வலிந்து காணாமல் போனோரின் உறவுகள் சங்கத்தலைவி ம.ஈஸ்வரி வலியுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவுக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கம் இன்றைய நாள் 1718ஆவது நாளாகத் தொடர்ச்சியாக நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.
இந்த நேரத்தில் நாங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கும் சர்வதேசத்திற்கும் அவசரமும் அவசியுமான ஒரு தகவலை தெரிவிப்பதற்காக இந்த ஊடகத்தைச் சந்திக்கின்றோம்.
அது என்னவென்றால் நாங்கள் ஏற்றுக்கொள்ளாத ஓஎம்பி அலுவலகத்தால், நாங்கள் பதிவு செய்யப்பட்டத்தையிட்டு அதாவது காணாமல்போனோர் தொடர்பில் கிடைக்கப்பட்ட முறைப்பாட்டின் தகவலின்படி தமக்கு ஆதாரப்பூர்வமாக மிகுதி தகவலையும் தரும்படி மக்களுக்குக் கடிதங்கள் அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்திலே இவ்வாறான கடிதங்கள் வந்து கொண்டிருகின்றன.
நாங்கள் அந்த ஓஎம்பி அலுவலகத்திலே எந்த ஒரு தகவலையும் பதிவுசெய்யவில்லை என்பதை உறுதிப்படுத்துவதோடு, ஒரு பொய்யான தகவலாக வைத்துக்கொண்டு மக்களிடம் இருந்து தகவலை ஏற்று எமக்கான மரணசான்றிதலுக்கான ஆரம்பக்கட்ட வேலைகள் செய்வதற்கு முனைகின்றார்கள்.
இந்த விடயத்தில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாகிய நீங்கள், நாங்கள் இந்த முறைப்பாட்டைச் செய்யவில்லை என்பது தொடர்பில் தெளிவாக இருக்கின்றபடியால் இந்த தெளிவு அவர்கள் எங்களுக்கு மரண சான்றிதழ்கள் தருவதற்கான இந்த பதிவை ஏற்றுக்கொண்டதாக நினைக்கின்றார்கள்.
நாங்கள் இதிலே மிகவும் கவனமாக இருப்பதோடு ஓஎம்பி அலுவலகங்கள் நாங்கள் பலதடவைகள் இந்தப்பதிவுகளை நீங்கள் செய்யக்கூடாது என்று கூறியுள்ளோம்.
எமது பதிவுகளை அதாவது புகைப்படம், காணாமற்போனோரின் ஐ.சி நம்பர் காணாமல் போனோருக்கான ஆவணம் போன்ற முழு தகவல்களையும் கேட்பதற்கு நாங்கள் ஒரு மடையர்கள் அல்ல.
அந்த தகல்களைத் தருவதற்கு எமக்கு இந்த ஓஎம்பி வேண்டாம் என்பதை இந்த சந்தர்ப்பத்திலே நாங்கள் ஆணித்தரமாக அடித்துச் சொல்கின்றோம்.
ஜனாதிபதி, காணாமல்போனவர்களுக்குத் தான் மரண சான்றிதழ் கொடுக்க தயாராக இருக்கின்றேன் என்று சர்வதேசத்திடம் கூறிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலே அதை சந்தர்ப்பமாக வைத்து ஓஎம்பி அலுவலகம் பாதிக்கப்பட்ட உறவுகளிடம் இருந்து இந்தத்தகவலைப் பெற்று மரண சான்றிதழ்கள் தர முனைகின்றார்கள்.
இதை உடனடியாக நிறுத்தவேண்டும். மக்களுக்கு அனுப்பும் கடிதங்களை நீங்கள் திரும்பப் பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.