நாட்டில் நடைபெற்ற படுகொலைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து எந்தவிதமான நீதியும் கிடைக்கவில்லை: தி.சரவணபவன் (Photos)
இந்த நாட்டில் நடைபெற்ற பல படுகொலைகளுக்கு இலங்கை அரசாங்கத்திடமிருந்து எந்தவிதமான நீதியும் இதுவரையில் கிடைக்கவில்லையென மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத காரணத்தினால் முழு கிறிஸ்தவ மக்களும் கடும் கோபத்தில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை முழுவதையும் உலுக்கிய உயிர்த்த ஞாயிறு படுகொலை நினைவு தினத்தினை முன்னிட்டு இன்று நாடெங்கிலும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு - காந்திபூங்காவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின்
ஞாபகார்த்தமாக கட்டப்பட்டுள்ள நினைவுத்தூபியில் மட்டக்களப்பு மாநகரசபையின்
முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது நினைவுத்தூபியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் சஹ்ரான் காசிம் தலைமையிலான தற்கொலைக் குண்டு தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததுடன், 93 பேர் படுகாயமடைந்தனர்.
இவர்களின் நினைவாக இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளதுடன் நினைவேந்தல்கள் நடத்தப்பட்டுவருகின்றன.
இதில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட
மாநகரசபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.







