கெஹெலியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: ஐக்கிய மக்கள் சக்தியின் திட்டம்
சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை
முன்வைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.
மருந்து கொள்வனவு மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள கெஹெலிய ரம்புக்வெலவை, அமைச்சரவையில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காத பட்சத்திலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சரவையில் நீடிக்கும் கெஹெலிய
கெஹெலிய ரம்புக்வெல சுகாதார அமைச்சராக இருந்தபோது, அவருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவந்த போதிலும் அது தோற்கடிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கெஹெலிய ரம்புக்வெலவிடம் இருந்து சுகாதார அமைச்சு பறிக்கப்பட்டு, அது ரமேஷ் பத்திரனவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்நது.
இருந்தபோதிலும், தற்போது, கெஹெலிய ரம்புக்வெல, அமைச்சரவையில் சுற்றாடல் துறை அமைச்சராக நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |