சாதாரண தர மற்றும் உயர் தர பாடத்திட்ட மாற்றம் குறித்து விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
புதிய கல்வி சீர்திருத்த திட்டத்தின் கீழ் தேர்வு முறையிலோ அல்லது சாதாரண தர மற்றும் உயர் தர பாடத்திட்டங்களிலோ எவ்வித மாற்றமும் முன்னெடுக்கப்பட மாட்டாது என்று தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுள விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், "தற்போதைய நவீன உலகத்திற்கு ஏற்ப மாணவர்களுக்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தாலும், தேர்வு முறை, பாடத்திட்டம் மற்றும் பாடங்களைப் புதுப்பிக்க கணிசமான நேரம் தேவைப்படும்.
இந்நிலையில், இந்த சீர்திருத்தங்கள், ஒரே நேரத்தில் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டால், ஒரு பெரிய நெருக்கடி உருவாகும்.
தேர்வு முறை
அத்துடன், தேர்வுகள் அல்லது பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டால், மாணவர்கள் அதற்குத் தயாராக குறைந்தது இரண்டு ஆண்டுகள் சரி தேவைப்படும்.
எனவே, இந்நிலைமை காரணமாக பாடத்திட்டம் படிப்படியாக புதுப்பிக்கப்பட்டு தரம் 1 முதல் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். அதேவேளை, தற்போது 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களின் பாடத்திட்டங்களில் முன்னெடுக்க வேண்டிய மாற்றங்கள் குறித்து கல்வி அமைச்சகத்துடன் கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன.
அதன்படி, எட்டு வருடங்களுக்கு ஒருமுறை பாடத்திட்டத்தைப் புதுப்பிக்கும் முறை வழக்கம் போல் தொடரும் ” என சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, தேசிய கல்வி ஆணையத்தின் தலைவர் பத்மினி ரணவீர தெரிவிக்கையில், பாடசாலை பாடத்திட்டங்கள் ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று தேசிய கல்வி ஆணையம் கல்வி அமைச்சகத்திற்கு முன்மொழிந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
குறுகிய காலம்
மேலும், இலங்கையில் பாடத்திட்டத்தை திருத்துவதற்கான காலக்கெடுவாக, தற்போது நடைமுறையில் உள்ள எட்டு ஆண்டுகள் மாற்றப்பட வேண்டும் என்றும் இந்த காலம் பாடத்திட்டத்தை திருத்த போதுமானதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அது மாத்திரமன்றி, பத்து வருடங்களுக்கு ஒருமுறை பாடத்திட்டத்தை மாற்றும் நடைமுறைக்கு கல்வி அமைச்சகம் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முந்தைய ஆண்டுகளில், எட்டு ஆண்டுகள் முடிவதற்குள் அரசியல் மாற்றங்கள் காரணமாக பாடத்திட்டங்கள் திருத்தப்பட்ட சந்தர்ப்பங்கள் இருந்ததாகவும் தெரிவித்த பத்மினி ரணவீர, தேசிய கல்வி ஆணையத்தால் முன்மொழியப்பட்ட பத்து ஆண்டு காலத்திற்குள் சில பாடங்களைப் புதுப்பிப்பதற்கு வாய்ப்பு எனவும் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)