டயானா கமகேவிற்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்படவில்லை: நீதிமன்றில் அறிவிப்பு
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு குடியுரிமைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
டயானா கமகேவின் குடியுரிமையை எதிர்த்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நீதிப்பேரணை மனுவுக்காக, மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஹபீல் ஃபாரிஸ், குற்றப்புலனாய்வு துறைக்கு அளித்த வாக்குமூலத்தில் டயானா கமகே தாம் பிரித்தானிய பிரஜை என்பதை ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
டயானா கமகேவிற்கு குடியுரிமை சான்றிதழை வழங்கவில்லை என்பதை குடியகல்வு மற்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தனது வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டயானா கமகே, தாம் ஒரு பிரித்தானிய பிரஜை எனவும், 2014 ஆம் ஆண்டு தனது பிரித்தானிய குடியுரிமையை துறந்ததாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக ஃபாரிஸ் கூறியுள்ளார்.
நியமனத்தை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல்
எனினும் டயானா கமகே வேறொரு நாட்டின் குடியுரிமை பெற்ற பின்னர், இலங்கையில் குடியுரிமை பெறுவதற்கான ஒரே வழி, சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று ஃபாரிஸ் வாதிட்டார்.
டயானா கமகே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ, 1990 ஆம் ஆண்டின் மேன்முறையீட்டு நீதிமன்ற விதிக்கு இணங்காததால் மனுவை தள்ளுபடி செய்யுமாறு நீதிமன்றத்தை கோரினார்.

அத்துடன் டயானா கமகேயின் சட்டப்பூர்வமான நியமனத்தை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளமையினால் டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் பெர்னாண்டோ வாதிட்டார்.
இந்தநிலையில், இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய பிரஜை என்பதால் நாடாளுமன்ற உறுப்பினராக தகுதியற்றவர் என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு மீதான தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அக்டோபர் 18 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதெநேரம் அக்டோபர் 4ஆம் தேதிக்கு முன்னதாக எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்களைத் தாக்கல் செய்யுமாறு இரண்டு தரப்புகளுக்கும் உத்தரவிடப்பட்டது.
டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என்று உத்தரவிடுமாறு
கோரி சமூக ஆர்வலர் ஓஷால ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்