ராஜபக்சக்களின் கரங்களில் இரத்தக்கறை இல்லை..! விளக்கமளிக்கும் நாமல்
ராஜபக்சக்களின் கரங்களில் இரத்தக்கறை படியவில்லை. சட்டவிரோதச் செயற்பாடுகளுக்குத் துணைபோகவில்லை. போதைப்பொருள் வியாபாரத்தை ராஜபக்சக்கள் மீது சுமத்த இடமளிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் தொடர்பில் பொலிஸார் மாறுபட்ட விடயங்களை குறிப்பிட்டுள்ளனர்.
தனது அரசியல் நிலைப்பாட்டுக்கு
முறையான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொள்ள வேண்டும். கட்சி மட்டத்தில் அந்த உறுப்பினரின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது.
அரசியல் பழிவாங்கல் இல்லாமல் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒழுக்கமாகவே நாங்கள் செயற்படுகின்றோம். கட்சியில் எவரேனும் உறுப்பினர் ஒழுக்கமற்ற வகையில் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனது அரசியல் நிலைப்பாட்டுக்கு இந்தச் சம்பவத்தை அரசு பயன்படுத்திக்கொள்ளக் கூடாது. நடுநிலையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும், நியாயம் கிடைக்கும்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் தமது பொறுப்பை சரிவரச் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அரசின் உயர் பதவிகளில் உள்ளார்கள்.
பொறுப்பற்ற வகையில் செயற்பட்டமைக்கான பொறுப்பை அவர்கள் ஏற்காமல் அதனையும் பிறிதொரு தரப்பினர் மீது சுமத்துகின்றார்கள்.
பரிசோதனைகளுமின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள்
சுங்கத்தில் இருந்து எவ்வித பரிசோதனைகளுமின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முன்கூட்டியதாகவே தகவல்கள் கிடைத்திருந்ததா? வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவு இந்தக் கொள்கலன்கள் தொடர்பில் ஏதேனும் அறிவித்திருந்ததா? நுவரெலியா பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் நடத்திச் செல்லப்பட்டுள்ளது என்று தற்போது குறிப்பிடப்படுகின்றது.
இந்த இடம் யாருக்குச் சொந்தமானது என்பதை அரசு பகிரங்கப்படுத்த வேண்டும். இலங்கையைப் போதைப்பொருள் மையமாக மாற்றியமைக்க வேண்டாம் என்று அரசிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
ராஜபக்சக்களின் கரங்களில் - மொட்டுக் கட்சியினரின் கரங்களில் இரத்தக்கறை படியவில்லை. சட்டவிரோதச் செயற்பாடுகளுக்கு நாங்கள் ஒருபோதும் துணைபோகவில்லை.
ஆகவே, நாங்கள் திணறப் போவதில்லை என்று அரசிடம் குறிப்பிட்டுக்கொள்கின்றோம். முறையான மற்றும் நடுநிலையான விசாரணைகளை மேற்கொண்டு உண்மையை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உண்டு.
போதைப்பொருள் வியாபாரத்தை ராஜபக்சக்கள் மீது சுமத்த இடமளிக்கப் போவதில்லை. உண்மையை வெளிப்படுத்தும் வரை அரசுக்கு அழுத்தம் பிரயோகிப்போம்." என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




