அமெரிக்க போர்க்கப்பல் மீது தாக்குதல் நடைபெறவில்லை என அறிவிப்பு!
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே அமெரிக்கக் கடற்படைக் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் வெளியிட்ட தகவலை அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.
"எந்தவொரு அமெரிக்க போர்க்கப்பலும் தாக்கப்படவில்லை" என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், அமெரிக்கப் படைகள் தற்போது "புராஜெக்ட் ஃப்ரீடம்" திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா திட்டவட்டம்
முன்னதாக, ஈரானின் ஜாஸ்க் தீவு அருகே புரட்சிகர காவல்படையின் எச்சரிக்கையை மீறிச் சென்ற அமெரிக்கக் கப்பல் மீது இரண்டு ஏவுகணைகள் பாய்ந்ததாக ஈரானிய செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது.

இந்தத் தாக்குதலால் அமெரிக்கக் கப்பல் சேதமடைந்து பின்வாங்கியதாக ஈரான் தரப்பு கூறியிருந்த நிலையில், அமெரிக்கா அதனை முற்றிலுமாக மறுத்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள வணிகக் கப்பல்களை மீட்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையில், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் தகவல் முரண்பாடு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.