காணாமல்போயுள்ள 9 வயது சிறுமி: பொலிஸார் வெளியிட்ட தகவல்
களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம, அட்டுளுகமை பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்பது வயதுச் சிறுமியொருவர் நேற்று காணாமல்போயுள்ளார்.
குறித்த சிறுமி இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை. இது தொடர்பில் பண்டாரகம பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் எமது செய்திசேவை தொடர்பு கொண்டு வினவியபோது,
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சிறுமி வான் ஒன்றில் கடத்தப்பட்டதாகவும், வான் ஒன்றின் இலக்கங்களும் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. இதில் எவ்வித உண்மையும் இல்லை. சம்பவத்தில் குறிப்பிடப்படும் வானை நாங்கள் பரிசோதித்தோம்.
குறித்த வானுக்கும் சிறுமி காணாமல் போயுள்ளமைக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென தெரிவித்தார்.
மேலும், குறித்த சிறுமியை தேடிப்பிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளதுடன், சிறுமி தொடர்பான தகவல்கள் ஏதேனும் அறிந்தவர்கள் 0777075223 இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
தென்னிலங்கை- பண்டாரகமவில் நேற்று வெள்ளிக்கிழமை, முற்பகல் 10 மணி முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் ஒன்பது வயது சிறுமியைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் நாடளாவிய ரீதியில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிறுமி அட்டாலுகம பிரதேசத்தில் வசிப்பவர்., அவர் உள்ளூர் பாடசாலையொன்றில் தரம் 4 இல் கல்வி பயின்று வருகிறார்.
அவர் முற்பகல் 10 மணியளவில் உணவு வாங்குவதற்காக அருகில் உள்ள வியாபாரத்தளத்துக்கு சென்றதாகவும், எனினும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் மற்றும் அயலில் தேடிய பின்னர், உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்தநிலையில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக, குறித்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.