மதுபோதையில் வாகனம் செலுத்திய ஒன்பது பேருக்கு தண்டப்பணம்
கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் மது போதையில் வாகனம் செலுத்திய ஒன்பது பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் மதுபோதையில் வாகனம் செலுத்திய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குகளை பதிவு செய்த கிளிநொச்சி பொலிஸார் சந்தே நபர்களை இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகளுக்கு தலா 25,000 ரூபா வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை காப்புறுதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியவருக்கு 30 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் தவறான முறையில் வாகனத்தைச் செலுத்திச் சென்ற இரண்டு பேருக்கு தலா 5000 ரூபாவும் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை 06 மாத காலத்திற்கு இடைநிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிச்
சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு சுமார் இரண்டு இலட்சம் ரூபா
தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் மணல் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.



