இந்தியாவுக்கு பயம் ஏற்படவேண்டும்: சீக்கிய தலைவரின் கொலை தொடர்பில் ட்ரூடோ விளக்கம்
கனடாவில் சீக்கிய தலைவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியாவை குற்றம் சுமத்தியமைக்கான காரணத்தை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படுத்தியுள்ளார்.
சீக்கிய தலைவரின் கொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாக நம்பத்தகுந்த ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன என்பதை வெளிப்படையாக கூறுவதன் மூலம், இந்தியா மேலும் அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காகவே, அதை உலகறிய , வெளிப்படையாக கூறினோம் என்று ட்ரூடோ கூறியுள்ளார்.
குறித்த கொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக குற்றம் சாட்டியதால், இருநாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
இந்திய புலனாய்வு அமைப்பு
கடந்த ஜூன் மாதம் ஹர்தீப் சிங் மர்ம நபர்களால் கனடாவில்வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
அக்கொலையில் இந்திய புலனாய்வு அமைப்புக்கு தொடர்பிருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியிருந்தார்.
கடந்த ஜூன் 18 அன்று கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சர்ரே நகரில் உள்ள சீக்கிய குருத்துவாராவிற்கு வெளியே காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் 2 மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்நிலையில், செப்டம்பர் 18 ஆம் திகதி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜஸ்டின் ட்ரூடோ ,
“கனேடிய குடிமகன், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கும், இந்திய அரசின் புலனாய்வு அமைக்கும் சாத்தியமான தொடர்பு இருப்பதாக கனேடிய புலனாய்வு முகமைகள் விசாரித்து வருகின்றன.
இந்தியாவுக்கு எதிராக இயங்கும் சக்தி
கனடா மண்ணில், ஒரு கனேடிய குடிமகனை வெளிநாட்டு அரசாங்கம் கொல்வது நமது இறையாண்மை மீறல்.
ஜி20 உச்சி மாநாட்டில், இது குறித்த எனது கவலைகளை வெளிப்படுத்தினேன். இந்திய அரசு இவ்விவகாரத்தில் கனடாவுடன் ஒத்துழைக்க வேண்டும்.” என கேட்டுக்கொண்டார்.
கனடா பிரதமரின் இக்குற்றச்சாட்டுகளை இந்தியா முற்றிலுமாக மறுத்திருந்தது.
ஜனநாயக அரசியலமைப்பு கொண்ட இந்தியா சட்டத்தின் ஆட்சியை ஏற்றுக்கொண்டிருக்கிறது என்றும், இந்தியா இறையாண்மைக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ள காலிஸ்தான் அமைப்பினருக்கு கனடா அடைக்கலமாக இருப்பதை திசைத்திருப்ப இக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது என்றும், தங்கள் மண்ணில் இருந்து இந்தியாவுக்கு எதிராக இயங்கும் சக்திகள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம் என இந்திய வெளியுறவு அமைச்சகம் பதில் வழங்கியிருந்தது.
இதற்கிடையே கனடா தங்கள் நாட்டில் உள்ள இந்தியத் தூதரை வெளியேற உத்தரவிட்டது.
அதற்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள கனடா தூதரை இந்திய மத்திய அரசு 5 நாட்களுக்குள் வெளியேற உத்தரவிட்டது.
இந்தியாவுக்கு எதிரான கனடாவின் இந்நடவடிக்கைகள் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியிருந்தன.
இந்நிலையில், இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியாவுக்கு பயம் ஏற்படவேண்டும் எனவும், தங்களுக்கும் அதேபோன்றதொரு நிலைமை ஏற்படலாம் என கனேடியர்கள் பலர் கவலைப்பட்டதாகவும், இதன் பின்னணியில் இவ்வாறான அறிக்கையை வெளியிடவேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் ட்ரூடோ கூறியுள்ளார்.
துவாரகாவின் பெயரைப் பயன்படுத்தி 45 நிமிடங்களில் சேர்க்கப்பட்ட பணம்! அம்பலப்படுத்தப்பட்ட இரகசியம்(Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |