நைஜீரியாவின் முன்னாள் சட்டமா அதிபருக்கு பிணை
நைஜீரியாவின் முன்னாள் சட்டமா அதிபர் (Attorney General) அபூபக்கர் மலாமி, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கு பணமோசடி வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
2015 முதல் 2023 வரை முன்னாள் ஜனாதிபதி முஹம்மது புகாரியின் ஆட்சியில் மிகவும் செல்வாக்கு மிக்க அமைச்சராக இருந்த 58 வயதான மலாமி மீது, சுமார் 8.7 பில்லியன் நைரா (சுமார் 6 மில்லியன் டொலர்) மதிப்பிலான பணமோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க
கடந்த டிசம்பர் 30 முதல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
மேலும், இந்த கைது நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அவர் வாதிட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற விசாரணையில், நீதிபதி எமேகா நைட்டி (Emeka Nwite) அவர்கள் மூவருக்கும் தலா 500 மில்லியன் நைரா பிணைத் தொகையாக நிர்ணயித்து உத்தரவிட்டார்.
பிணையில் செல்ல அவர்கள் தங்களின் பயண ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், தலைநகர் அபுஜாவின் முக்கிய பகுதிகளில் சொத்துக்கள் வைத்திருக்கும் இருவரை பிணையாளர்களாக முன்வர வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மலாமி தனது பதவியைப் பயன்படுத்தி அரசு நிதியைத் திசைதிருப்பியதாகவும், அந்தப் பணத்தைக் கொண்டு அபுஜா, கெப்பி மற்றும் கானோ உள்ளிட்ட நகரங்களில் ஹோட்டல்கள், பாடசாலைகள் மற்றும் தொழிற்சாலைகள் எனப் பல கோடி மதிப்பிலான சொத்துக்களை வாங்கியதாகவும் நைஜீரியாவின் பொருளாதார மற்றும் நிதி குற்றங்கள் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை, 2026 பெப்ரவரி 17 அன்று நடைபெறவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri