விடுதலைப் புலிகளுடன் தொடர்பு - நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் வீட்டில் அதிரடி சோதனை
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நாம் தமிழர் கட்சி (NTK) பிரமுகர் ஒருவரின் வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) இன்று அதிரடி சோதனை நடத்தியுள்ளது.
சிவகங்கையில் உள்ள விக்னேஸ்வரன் என்பவரின் (27) வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பின் சோதனை நடத்தினர்.
முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்ற அதிகாரிகள்
மன்னார் துரைசிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாலைக்கு அருகில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை முதல் சோதனை தொடங்கியதாக சிவகங்கை மாவட்ட பொலிஸ் தலைமை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
விக்னேஸ்வரனுக்கு தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சில உறுப்பினர்களுடன் தொடர்பு இருப்பதாகவும், 27 வயதான அவர் சென்னையில் பணியாற்றி வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சாரதியாக பணிபுரியும் விக்னேஸ்வரன் விடுதலை புலி அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
விக்னேஸ்வரனிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் வீட்டில் இருந்த விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் புகைப்படம் மற்றும் புத்தகங்கள் கையேடுகளை கைப்பற்றினர்.
சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இச்சோதனை 8 மணியளவில் நிறைவு பெற்றதாகவும், சோதனையில் சில முக்கிய ஆவணங்களை NIA அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.
நடிகரும் இயக்குனருமான சீமானால் நிறுவப்பட்ட நாம் தமிழர் கட்சி வலுவான தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சபேசன் என்ற சத்குணம் கைது
இதனிடையே, தமிழகத்தில் விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருங்கிணைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய அமைப்புகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலை ஒருங்கிணைத்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை செயலிழந்த விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரான சபேசன் என்ற சத்குணம், அக்டோபர் 2021 இல் கைது செய்யப்பட்டார்.