உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்: மீண்டும் முதலிடத்தை பிடித்த நியூசிலாந்து
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 149 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இதனால், நியூசிலாந்து அணி பங்கேற்ற 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
இன்று (18.09.2023) சென்னை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.
நியூசிலாந்து அணி
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 288 ஓட்டங்களை பெற்றது.
நியூசிலாந்து அணி சார்பில் க்ளென் பிலிப்ஸ் அதிகப்பட்சமாக 71 ஓட்டங்களை பெற்றதுடன் அணியின் தலைவர் டாம் லாதம் 68 ஓட்டங்களையும் வில் யங் 54 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் நவீன்-உல்-ஹக் மற்றும் அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
ஆப்கானிஸ்தான் அணி
இந்நிலையில் 289 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 34.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.
அந்த அணி சார்பில் ரஹ்மத் ஷா அதிகபட்சமாக 36 ஓட்டங்களை பெற்றதுடன் இக்ராம் அலிகில் ஆட்டமிழக்காமல் 19 ஓட்டங்களை பெற்றனர்.
பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் மிட்செல் சான்ட்னர் மற்றும் லாக்கி பெர்குசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதன்படி நியூசிலாந்து அணி இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.