விரைவில் பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய சட்டமூலம் நாடாளுமன்றில்! தினேஷ் குணவர்தன
பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய சட்டமூலத்தை இம்மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அனைத்து அரசியல் தரப்பினருடனும் கலந்துரையாடியதன் பின்னர் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
உத்தேச சட்டமூலம் மிகவும் விவாதிக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திறம்பட நீக்கும். பயங்கரவாத தடைச்சட்டம் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பல வருடங்களாக சர்ச்சைக்குரிய விடயமாக இருந்து வந்ததோடு நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அதனை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் அது நிறைவேறவில்லை.
புதிய சட்டமூலம்
பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமூலத்தை அறிமுகப்படுத்த தற்போதைய நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மார்ச் 22 ஆம் திகதி வர்த்தமானியூடாக வெளியிடப்பட்ட உத்தேச சட்டமூலத்தின் பல பிரிவுகள் தொடர்பில் தற்போது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இது தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் கடுமையானது எனவும் விமர்சிக்கப்படுகின்றது.
நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு, பயங்கரவாதம் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக உத்தேச வரைபின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதக் குற்றங்கள்
பயங்கரவாதக் குற்றங்கள் தொடர்பில் இந்த வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாம் பகுதியின் பிரிவு 3E-இற்கு அமைய, எந்தவொரு அத்தியாவசிய சேவை அல்லது விநியோகம் அல்லது ஏதேனும் முக்கியமான உட்கட்டமைப்பு வசதி அல்லது அது தொடர்பான போக்குவரத்து வசதிகளை சீர்குலைப்பது பயங்கரவாத குற்றம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தகைய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என்பதுடன், அதிகபட்சமாக ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு, குறித்த தரப்பினரது சொத்துகளை அரசுடைமையாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் 10 ஆவது பிரிவில், பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது தொடர்பில் குறிப்பிடப்படுள்ள விடயங்களும் தற்போது பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மக்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயங்கரவாதக் குற்றத்தை செய்வதில் ஈடுபடுத்துதல், தூண்டுதல் அல்லது ஊக்குவிக்கும் நோக்கில் கருத்து வெளியிடுதலும் குற்றம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடகங்கள்
அச்சு ஊடகம், இணையம், இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் ஏனைய பொது விளம்பரங்களும் இந்த சட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்தகைய குற்றத்திற்காக, 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை, அதிகபட்சமாக ஒரு மில்லியன் ரூபா அபராதம் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் சொத்துகளை அரசுடைமையாக்குவதற்கான நடவடிக்கை தொடர்பிலும் குறித்த சட்டமூலத்தின் சரத்துக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
உத்தேச சட்டமூலத்திற்கமைய, பிடியாணை இன்றி ஒருவரை கைது செய்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதுடன், பிரதி பொலிஸ்மா அதிபரின் உத்தரவினை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு, மூன்று மாத காலம் வரை தடுப்புக் காவலில் வைக்கவும் முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுடனான மோதலின் போது ஒரு தற்காலிக நடவடிக்கையாக 1979 இல் PTA நடைமுறைக்கு வந்தது, பின்னர் அது 1982 இல் நிரந்தரமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
