ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர்களின் முகவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய ஒழுங்குமுறை விதிகளின் கீழ், 5 வீரர்களின் முகவர்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர்.
வெளிப்புற தலையீடுகளைத் தடுப்பதையும், வீரர்களின் முகாமையை ஒழுங்குபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 30 பேர் விண்ணப்பித்த போதிலும், தகுதி வரம்புகளின் அடிப்படையில் ஏற்கனவே வீரர்களின் முகவர்களாக செயற்பட்ட 5 பேர் மட்டுமே தகுதி பெற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
தவறான வழியில் செல்வாக்கு செலுத்த
இது குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மறுசீரமைக் குழு உறுப்பினர் ரொஷான் மகாநாம அதிருப்தி வெளியிட்டதுடன், ஏனைய தகுதியுடையவர்களையும் பதிவு செய்யுமாறு கோரியுள்ளார்.

பதிவு செய்யப்பட்ட முகவர்கள், வீரர்களின் பதிவு, பயணம், தங்குமிடம், நலன்புரி, ஒப்பந்த விதிமுறைகள் மற்றும் வணிக ரீதியான விடயங்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து ஒருங்கிணைக்க முடியும்.
முகவர்கள் அல்லது வீரர்கள் எவரும் கிரிக்கெட் நிர்வாகிகள் அல்லது தேர்வாளர்களை தவறான வழியில் செல்வாக்கு செலுத்த முற்படக் கூடாது.
வீரர்களின் நடத்தை குறித்து நடவடிக்கை
அணி தேர்வு மற்றும் கிரிக்கெட் விவகாரங்களில் முகவர்கள் தலையிட முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறினால் முகவர் அங்கீகாரத்தை ரத்து செய்ய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அதிகாரம் உண்டு. ஒரு வீரருக்கு ஒரு நேரத்தில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட முகவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்.

அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைகளின் நடைமுறைகளை ஆய்வு செய்தே இந்த புதிய கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாக ரொஷான் மகாநாம தெரிவித்துள்ளார்.
இதேவேளை முகவர்கள் அணி தேர்வில் தலையிட்டால் சம்பந்தப்பட்ட வீரர்களின் நடத்தை குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் வீரர் சிதத் வெத்திமுனி எச்சரித்துள்ளார்.