புதிய மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட தகவல்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய மாகாண ஆளுநர்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிலரை நியமிக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 154(பி) பிரிவின் கீழ் புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.
காமினி திஸாநாயக்க
இந்தநிலையில் ஆளுநர் பதவிக்கான வேட்பாளராக சமூக வலைதளங்களில் தமது பெயர் குறிப்பிடப்படுவதை பற்றி தாம் எதனையும் கூறமுடியாது என்றும் நவீன் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறும் அனைவரும் அரசியல் ரீதியாக அழிக்கப்பட்டுள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்த கருத்து தொடர்பில் வினவிய போது, தனது தந்தை மறைந்த அமைச்சர் காமினி திஸாநாயக்கவுக்கும் இது பொருந்தும் எனவும், தனது தந்தை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு திரும்பியே தனது இறுதி மூச்சை விட்டதாகவும் முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுடன் ஏற்பட்ட முறுகலே தமது தந்தையை மாற்றுவழிக்கு இட்டுச்சென்றதாகவும் நவீன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் தமது தந்தை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகவே மேடையில் இறுதி மூச்சை விட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.