இலங்கையிலேயே முதன்மை கல்லூரிகளில் ஒன்றான பிரபல தமிழ் தேசிய பாடசாலையின் அதிபர் நியமன இழுபறிக்கு தீர்வு (Photos)
150 ஆண்டு கால வரலாற்றை கொண்ட மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கான நிரந்தர அதிபர் நியமன இழுபறி விடயத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது.
இதற்கு முன்னர் கல்லூரி அதிபராக கடமையாற்றியிருந்த பயஸ் ஆனந்தராஜா கடந்த வருடம் (2022) டிசம்பர் 30ஆம் திகதி தனது சேவையில் இருந்து ஒய்வு பெற்றிருந்தார்.
பதில் அதிபர் நியமனம்
இதனையடுத்து அந்த வெற்றிடத்திற்கு பதில் அதிபராக ஒரு ஆசிரியை ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
எனினும், அந்த ஆசிரியையின் நியமனத்தை பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் முற்றுமுழுதாக ஏற்க மறுத்தனர்.
அத்துடன், புதிய அதிபராக அருட்தந்தை லொபோனை நியமிக்க வேண்டும் என தெரிவித்து, பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களும் வகுப்பறைகளை பகிஸ்கரித்தனர்.
அதன் பின்னர் அந்த இடத்திற்கு மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் அழைக்கப்பட்டு இந்த விடயம் தொடர்பில் ஆசிரியர்களுடன் கலந்தாலோசனை நடத்தினார்.
பதில் அதிபர் பொறுப்பேற்பு
ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரின் எதிர்ப்புக்கு மத்தியில், ஆயரின் ஒப்புதலுடன் பதில் அதிபராக பிரபாகரன் கடமைகளைப் பொறுப்பெடுத்துக் கொண்டார்.
எனினும் நிரந்தமாக அதிபர் நியமிப்பதில் தொடர்ச்சியாக இழுபறி நிலை நிலவி வந்த நிலையில் கடந்த 15ஆம் திகதி மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லுாரிக்கான நிரந்தர அதிபர் நியமனமானது இலங்கை கல்வி நிர்வாக சேவையை சேர்ந்த அன்ரன் பெனடிக் ஜோசப்க்கு கல்வி அமைச்சில் வழங்கி வைக்கப்பட்டது.
அதற்கமைய புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர் அன்ரன் பெனடிக் ஜோசப் இன்றைய தினம் (25.08.2023) தனது கடமைகளை பொறுபேற்றுக் கொண்டார்.
கல்வி அமைச்சினால் கடந்த மே மாதம் 30 ஆம் திகதியன்று இலங்கையில் உள்ள 17 தேசிய பாடசாலை அதிபர் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஜூலை 21ஆம் திகதி நேர்முகப்ரீட்சை இடம்பெற்றதுடன் பொதுச்சேவை ஆணைக்குழுவின் முறையான அனுமதியுடன் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பேராதனை பல்கலைக்கழக பட்டதாரியான அன்ரன் பெனடிக் ஜோசப் இலங்கை கல்வி நிருவாக சேவையில் 2016 ஆம் இணைந்து கொண்டார்.
இவர் தனது பாடசாலை, பல்கலைக்கழக காலங்களில் சிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்ததுடன் மும்மொழிச் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், பட்டப்படிப்பின் பின்னர் பல்வேறு சர்வதேச தொண்டு நிறுவனங்களின் நிருவாக துறையில் கடமையாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கல்வி நிருவாக சேவை நியமனத்தில் முதன்மை நிருவாகியாக தெரிவு செய்யப்பட்டார் என்பதோடு, தற்போது வடமத்திய மாகாண அனுராதபுரம் கல்வி வலயத்திற்கான நிர்வாக பணிப்பாளராக கடமையாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் புதிய அதிபருடைய பதவியேற்பு ஒரு முக்கிய காலகட்டத்தில் நடந்த பதவியேற்பாகவே மாணவர்களும், கல்வி சார் சமூகமும், பழைய மாணவர்களும், பெற்றோரும் பார்க்கின்றனர். குறிப்பாக மட்டக்களப்பு மக்கள் மத்தியில் நீண்ட காலமாக ஒரு அதிருப்தி இருந்து வந்தது.
கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல இலங்கையிலேயே முதன்மை கல்லூரிகளில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி அண்மைக்காலமாக பல்வேறு அரசியல் தலையீடுகள் காரணமாகவும், சில மதத் தலைவர்களின் எதேச்சதிகாரம் காரணமாகவும் சில பழைய மாணவர்கள் விளைவித்த குளறுபடிகள் காரணமாகவும் சீரழிவை நோக்கி இட்டுச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தது.
தகுதியற்ற தற்காலிக அதிபர்களால் நீண்டகாலமாக இந்த இடம் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் தற்போது முல்லைத்தீவை சேர்ந்த ஒரு தகுதிவாய்ந்த அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்தவகையில் இது பாராட்டத்தக்க விடயமாகும்.
இந்த பாடசாலை ஒரு ஒழுக்கமுள்ள பாடசாலையாக மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்ற நம்பிக்கையை பல்வேறு பெற்றோர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். சில ஆசிரியர்களை தொடர்பு கொண்டு கேட்ட போதும் அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.
அதேபோன்று கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா போன்ற பல புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற சக்தி வாய்ந்த பல பழைய மாணவர்கள் சங்கத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது வெகு விரைவில் ஒரு பாரிய மாற்றத்தை காணக்கூடியதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
150 வருட விழாவை அடுத்த மாதம் கொண்டாட இருக்கின்ற, கொண்டாடுவதற்கான ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் தகுதிவாய்ந்த அதிபரொருவர் நியமிக்கப்பட்டுள்ளமை பலராலும் வரவேற்பிற்கு உள்ளாகியுள்ளது.







