நீண்ட இழுபறிக்கு பின்னர் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கு அதிபர் நியமனம் (video)
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் அதிபராக இருந்த திரு பயஸ் ஆனந்தராஜா கடந்த 30ஆம் திகதி(30/12/2022) ஓய்வுபெற்றதை அடுத்து அந்த வெற்றிடத்திற்கு பதில் அதிபராக ஒரு ஆசிரியை ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
எனினும், அந்த ஆசிரியையின் நியமனத்தை பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் முற்றுமுழுதாக ஏற்க மறுத்தனர்.
பிரச்சினைக்குத் தீர்வு
அத்துடன், புதிய அதிபராக அருட்தந்தை லொபோனை நியமிக்க வேண்டும் என தெரிவித்து, பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களும் நேற்றைய தினம் வகுப்பறைகளை பகிஸ்கரித்தனர்.
அதன் பின்னர் அந்த இடத்திற்கு மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் அழைக்கப்பட்டு இந்த விடயம் தொடர்பில் ஆசிரியர்களுடன் கலந்தாலோசனை நடத்தினார்.
ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக ஆயரின் ஒப்புதலுடன் அருட்தந்தை லெபோன் அவர்கள் பதில் அதிபராக கடமைகளைப் பொறுப்பெடுத்துக் கொண்டார்.
பழைய மாணவர்கள் உள்ளூர் கிளை, சர்வதேச கிளை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கக் கூடிய அனைவரது ஏகோபித்த தெரிவாக அருட்தந்தை லெபோன் அவர்கள் இருப்பதுடன் பாடசாலையில் தற்போது எழுந்துள்ள முக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு அருட்தந்தை லெபோனால் முடியும் என்பதும், அருட்தந்தை லெபோன் அனைவராலும் விரும்பப்படுவதற்கு காரணமாகும்.
வடக்கு - கிழக்கில் தற்போது மாணவர்களிடத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில், போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பாடசாலையில் அருட்தந்தை லெபோன் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். இந்த நிலையில் பாடசாலையின் பதில் அதிபராக தற்போது லெபோன் நியமிக்கப்பட்டுள்ளமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, புனித மிக்கல் கல்லூரியின் மாணவர்களின் ஒழுக்கங்களை பேணுவதற்காக புதிய துறவி ஒருவரை நியமிப்பதாக மட்டக்களப்பு ஆயர் கடந்த காலங்களில் தெரிவித்திருந்தார்.
அதோடு அம்மணவர்களின் ஒழுக்கநிலை மிகவும் பிந்தங்கியுள்ளதை கருத்தில்கொண்டே இந்த நியமனம் வழங்கப்படுவதாகவும் ஆயர் தெரிவித்திருந்தார்.
இப்படியாக ஆயர் அவர்கள் குறிப்பிட்ட நிலையில் கடந்த 31.12.2022ஆம் திகதியுடன் அதிபர் ஓய்வு பெற்றுள்ளதால், புதிய அதிபர் நியமனம் முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது.