சட்டமா அதிபரின் விருப்புரிமை! லசந்தவின் கொலை தொடர்பில் வலுக்கும் சர்ச்சை
இலங்கை ஊடக வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகக் கருதப்படும், லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுவிக்க சட்டமா அதிபர் பரிந்துரைத்துள்ளதைக் கருத்தில் கொண்டு, அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி பலத்த எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், சில தரப்பினர் சட்டமா அதிபரின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வாதங்களை முன்வைத்துள்ளனர்.
குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பான சட்டமா அதிபரின் விருப்புரிமை மற்றும் நடைமுறைகளில் அமைச்சரவை அல்லது அரசியல் அதிகாரிகள் தலையிடக்கூடாது என்று இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.
சட்டமா அதிபரால் எடுக்கப்படும் முடிவு
"குற்றவியல் விடயங்கள் தொடர்பாக சட்டமா அதிபரால் எடுக்கப்படும் முடிவுகளை அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட அரசியல் அதிகாரிகள் மறுபரிசீலனை செய்யக்கூடாது என்பதில் இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் உறுதியாக உள்ளது" என்று சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி வழக்கறிஞர் அநுர மெத்தெகெடா மற்றும் செயலாளரான வழக்கறிஞர் சதுர கல்ஹேனா ஆகியோர் கையெழுத்திட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
சட்டத்தின் ஆட்சிக்கு மிக முக்கியமான சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுதந்திரத்தை இதுபோன்ற மதிப்புரைகள் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்பதை கடிதம் வலியுறுத்துகிறது.
இதற்கிடையில், சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்திரணியுமான நிசாம் காரியப்பர், “லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பான வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுவிக்க சட்டமா அதிபர் பரிந்துரைக்க வேண்டியிருந்தது என்று கூறினார்.
ஏனெனில் குற்றப் புலனாய்வுத் துறை கடந்த 15 ஆண்டுகளாக இந்தக் குற்றம் தொடர்பாக நீதிமன்றத்திற்கு கூடுதல் தகவல்களைத் தெரிவிக்கவில்லை என்பதை நிசாம் காரியப்பர் அங்கு விளக்கியிருந்தார்.
புலனாய்வு விசாரணை
2010 ஆம் ஆண்டு உண்மைகளைப் முன்வைத்த பிறகு, குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையின் முன்னேற்றம் குறித்து மேலும் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இதுபோன்ற சூழ்நிலையில், சட்டமா அதிபருடன் தொடர்புடைய கோப்புகளை மூடிவிட்டு சந்தேக நபர்களை விடுவிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார். எனவே இந்த சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரைக் குற்றம் சாட்டுவது தவறு என்றும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி என்ற முறையில் இந்த அறிக்கையை தாம் பொறுப்புடன் வெளியிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலைில் ஜனாதிபதி வழக்கறிஞர் நிஷான் காரியப்பாரி வெளியிட்ட கருத்துக்கள் நாடாளுமன்றத்தையும் பொதுமக்களையும் தவறாக வழிநடத்துவதாக சில சமூக ஊடகங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.
அத்தோடு 16 ஆண்டுகாலமாக நீதி கிடைக்காத லசந்தவின் வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறைக்கு புதிய உத்தரவை பிறப்பிக்க சட்டமா அதிபர் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைக்கு புதிய திசை
அவரது சாரதியை கடத்திச் சென்று ஆதாரங்களை அழித்தமைக்காக கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு சட்டமா அதிபர் தெரிவித்திருந்தமை பெரும் சர்ச்சைகளை தேற்றுவித்திருந்தது.
முன்னதாக ஜனாதிபதி, சட்டமா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், சட்டமா அதிபர் தனது பொறுப்புகளை நிறைவேற்றுவது குறித்து ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலைில் இந்த சம்பவத்திற்கு நீதி வழங்க வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஊடக அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களும் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இதற்கமைய சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு பிறப்பிக்கவுள்ள புதிய உத்தரவு விசாரணைக்கு புதிய திசையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)