வாக்கெடுப்பின்றி இன்று நிறைவேறவுள்ள இலங்கை தொடர்பான புதிய பிரேரணை
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பிலான புதிய பிரேரணையின் இறுதி வரைவில் "இனமோதல்” என்ற சொற்பதம் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணை இன்று(06.10.2025) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அத்துடன், இந்தப் பிரேரணை இன்று வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான கோரிக்கை
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 6 ஆவது கூட்டத் தொடர் கடந்த மாதம் முதலாம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது.
இதில், பிரிட்டன் தலைமையிலான கனடா, மாலாவி, மொன்டினீக்ரோ, வட மசிடோனியா உள்ளிட்ட இணை அனுசரணை நாடுகளால் "இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்" என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் முதலாவது வரைவு கடந்த மாதம் 9 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, இந்தப் பிரேரணை தொடர்பில் கடந்த மாத நடுப் பகுதியில் உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற இலங்கை பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர் தமது மாற்று அபிப்பிராயங்களை முன்வைத்திருந்தனர்.
இதன் பின்னணியில், இலங்கை தொடர்பான இணை அனுசரணை நாடுகளின் புதிய பிரேரணை முதலாம் கட்ட மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, திருத்தங்களுடனான பிரேரணை கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டது.
அந்தப் பிரேரணையில் "இன மோதல்" என்பதற்குப் பதில் "மோதல்" என்ற சொற்பதம் பயன்படுத்தப்பட்டது. அத்துடன், சர்வதேச மனிதாபிமான சட்டத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஆராய விசேட சட்டவாதியின் பங்கேற்புடனான பிரத்தியேக நீதித்துறை பொறிமுறை ஒன்றை நிறுவுவது குறித்து அரசு அவதானம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்த விடயம் முற்றாக நீக்கப்பட்டிருந்தது.
எனினும், திருத்தப்பட்ட அந்தப் பிரேரணை பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான கோரிக்கையை நீர்த்துப் போகச்செய்யும் விதமாக அமைந்திருப்பதாகப் பல தரப்பினரும் விமர்சித்திருந்தனர்.
திருத்தப்பட்ட பிரேரணையின் உள்ளடக்கம்
இதையடுத்து, இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணையின் இறுதி வரைவில் ”இன மோதல்" என்ற சொற்பதம் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த விடயம், “இன மோதல்களின் விளைவாக இலங்கை முகங்கொடுத்த மிக மோசமான துன்பங்களை இலங்கை அரசு அங்கீகரித்தமையையும் பிரிவினையை ஏற்படுத்தக் கூடிய இனவாத அரசியலுக்கு இடமளிக்காமல் இருப்பதற்கான அதன் கடப்பாட்டையும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதுடன், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான அர்ப்பணிப்பையும் வரவேற்கின்றோம்" என்றவாறு மாற்றப்பட்டுள்ளது.
இன்று சமர்ப்பிக்கப்படும் இந்தத் திருத்தப்பட்ட பிரேரணையின் உள்ளடக்கத்தை நிராகரித்து இலங்கை எதிர்ப்பை வெளிப்படுத்தினாலும் அதனை நிறைவேற்றுவதற்கு வாக்கெடுப்பைக் கோராது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால், புதிய பிரேரணை இன்று வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படலாம்.
நிறைவேற்றப்படும் தீர்மானத்துக்கு அமைய மனித உரிமைகள் பேரவைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் பேரவையின் 63 ஆவது கூட்டத் தொடரில் எழுத்து மூல அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




