கச்சதீவு விவகாரம் தொடர்பில் வெளியான புதிய தகவல்
இலங்கைக்கு கச்சதீவை கொடுப்பதற்கு முன்னர் தமிழ்நாட்டின் இராமநாதபுரத்துக்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வருகை தந்து ராஜா இராமநாத சேதுபதியிடம் ஆலோசனை நடத்தியதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
மக்களவைத் தேர்தல் களத்தில் கச்சதீவு விவகாரம் பாரதிய ஜனதாவினால் பேசுபொருளாக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்னர் கச்சதீவை காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகக்கூட்டு சேர்ந்து இலங்கைக்கு கொடுத்துவிட்டதாக பாரதீய ஜனதா குற்றம் சுமத்தியுள்ளது.
இந்தநிலையில் குறித்த விவகாரம் தொடர்பாக இராமநாதபுரம் சமஸ்தானத்தின் தற்போதைய ராணி லெட்சுமி நாச்சியார் ஊடகமொன்றிற்கு செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள்
அதில், மக்கள் நலனுக்காக இலங்கைக்கு அப்போதைய மத்திய அரசு கச்சதீவை கொடுத்தது. இதற்கு இராமநாதபுரம் சமஸ்தானம் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும். கச்சதீவை இலங்கைக்கு கொடுப்பதற்கு முன்னர் பிரதமராக இருந்த இந்திரா காந்தி, இராமநாதபுரத்துக்கு வருகைத்தந்தார் அப்போது இராமநாதபுரம் ராஜாவாக இருந்த இராமநாத சேதுபதியுடன் இந்திரா காந்தி பேச்சுவார்த்தையும் நடத்தினார்.
கச்சதீவு மக்கள் நலனுக்காகவே இலங்கைக்கு கொடுக்கப்படுவதாக இந்திரா காந்தி
கூறியதன் காரணமாக இராமநாதபுரம் ராஜா இராமநாத சேதுபதி எதிர்ப்பும்
தெரிவிக்கவில்லை.
எனினும் கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டதால் தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே கச்சதீவை மீண்டும் பெறுவதற்கு மத்திய அரசு முயற்சித்தால் இராமநாதபுரம் சமஸ்தானத்தின் சார்பாக தாமும், தமது மகன் நாகேந்திர சேதுபதியும் உதவுவோம் என்று ராணி லெட்சுமி நாச்சியார் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |