மலையக தமிழர் விவகாரங்களுக்கு புதிய அதிகாரி நியமனம்!
இந்திய வம்சாவளி மலையக மற்றும் தென்னிலங்கை வாழ் தமிழ் மக்களின் விவகாரங்களைக் கையாள்வதற்காக, ஜனாதிபதி செயலகத்தின் தலைமை அதிகாரி பிரபாத் சந்திரகீர்த்தி விசேட இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்த வேண்டுகோளை ஏற்று, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தூதுக்குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு நடைபெற்றது.
தீர்மானங்கள்
இச்சந்திப்பின் போதே மலையக மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
கலந்துரையாடப்பட்ட முக்கிய விவரங்கள் வருமாறு,
டிட்வா மலையகப் பேரழிவு, காணி உரிமை, மலையகத்தில் தொடர்மாடி வீடுகளை நிராகரித்து தனிவீட்டுத் திட்டத்தை முன்னெடுத்தல் மற்றும் இந்திய வீடமைப்புத் திட்டம்.

தமிழ் பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவகர் பிரிவுகளை அதிகரித்தல், மேலதிக தமிழ் பிரதேச செயலாளர்களை நியமித்தல்.
அரச பொது நிர்வாகம் மற்றும் பொலிஸ் துறையில் தமிழர்களை உள்வாங்குதல், ஆசிரியர் நியமனங்கள், மாகாண மற்றும் வலய மட்டத்தில் தமிழ் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களை நியமித்தல்.
ஜனாதிபதி இணக்கம்
கொழும்பு றோயல், டீ.எஸ். சேனநாயக்க மற்றும் இசிபத்தன ஆகிய கல்லூரிகளில் தமிழ் வகுப்புகள் மற்றும் மாணவர் அனுமதி குறைக்கப்படுவது குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகத் தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள இணைப்பாளர் பிரபாத் சந்திரகீர்த்தியுடன் கலந்துரையாடி உடன்பாடுகளை எட்ட வேண்டும்.

அவ்வாறு எட்டப்படும் உடன்பாடுகளை அந்தந்த துறைசார் அமைச்சர்கள் ஊடாக நிறைவேற்றித் தர ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஷ்ணன் மற்றும் அரசியல் குழு உறுப்பினர்களான பரணிதரன், பாரத் அருள்சாமி, நகுலேஸ்வரன், விஜயசந்திரன், சசில்குமார், விஸ்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு