கிண்ணியாவுக்கும் - குறிஞ்சாக்கேணிக்கும் இடையிலான புதிய படகு சேவை ஆரம்பம்
கிண்ணியாவுக்கும் - குறிஞ்சாக்கேணிக்கும் இடையிலான படகுப் பாதை சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இன்று (27) இந்த படகு சேவையை ஆரம்பித்து வைத்தார்.
தற்போது குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருவதனால், பொது மக்களின் நன்மை கருதி இந்தப் படகுச் சேவை தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
படகு சேவை
இரண்டு வருடங்களில் பாலத்தின் முழுமையான கட்டட நிர்மாண வேலைகள் நிறைவடையவுள்ள நிலையில், அதுவரைக்கும் இந்தப் படகுப் பாதையின் சேவை செயற்பட உள்ளது.

இந்தத் தற்காலிகப் படகுப் பாதைக்கும், அதன் பராமரிப்புச் செலவிற்கும் இரண்டு வருடங்களுக்கு அரசாங்கத்தினால் ரூபா 75 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பான பயணத்துக்கான நடவடிக்கை பாதுகாப்பற்ற படகு சேவை காரணமாக 2021 ஆம் ஆண்டு, ஒரு தனியார் படகு ஆற்றில் கவிழ்ந்து, ஐந்து மாணவர்கள் உட்பட, 8 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்துக்கு முக்கியத்துவம் அளித்து சொகுசு இயந்திரப் படகு ஒன்று இன்றைய தினம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
நிர்மாண வேலைகள்
புதிய அரசாங்கம் ஒரு வருட காலமே பூர்த்தி அடைந்த நிலையில், கிண்ணியா - குறிஞ்சாக்கேணி ஆற்றுக்கு புதிய பாலம் அமைப்பதற்காக ரூபா 1200 மில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதுடன், தற்போது பாலத்துக்கான நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் ரொசன் அக்மீம, தேசிய மக்கள் சக்தியின் கிண்ணியா பிரதேச அமைப்பாளர் எம்.ஈ.எம். ராபிக் உட்பட கிண்ணியா பிரதேச மற்றும் நகர சபைகளின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.





