சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகர் நியமனம்
யாழ். (Jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் இன்று (09) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தீர்த்து வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க வேண்டும் எனவும் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவிற்கு ஆதரவு வழங்கியும் நேற்று (08) பொதுமக்களால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வைத்தியர் அர்ச்சுனாவிற்கு ஆதரவாக திரண்ட மக்கள்
பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா அரச நிர்வாக நடைமுறைகளுக்கு எதிராக செயற்பட்டு வருவதாக தெரிவித்து அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது, போராட்டக்காரர்கள் ஏ - 9 வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டமையினால் அவ்விடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, போராட்டக்களத்திற்கு பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், வைத்தியர் அர்ச்சுனா கொழும்பில் விசேட பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்ட நிலையிலும், சுகவீன விடுமுறையின் காரணமாகவும் வைத்தியசாலையை விட்டு நேற்று வெளியேறினார்.
இதன்போது, கருத்துரைத்த அவர்,
" வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்னை வைத்தியசாலையை விட்டு வெளியேறுமாறே கூறியுள்ளார்.
விடுக்கப்பட்ட அழைப்பு
ஆனால் இவ் விடயம் தொடர்பாக நாடாளுமன்றில் பேசி முடிவெடுக்கப்படவுள்ள நிலையிலும், என்னோடு பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தும் முகமாகவுமே என்னை கொழும்பிற்கு அழைத்துள்ளனர்.
நான் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராகவே கொழும்பு சென்று வரவுள்ளேன்.
ஆனால் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தானே வைத்திய அத்தியட்சகர் எனத் தெரிவிக்கின்றார். அந்த முடிவை நீதிமன்றம் தான் எடுக்க வேண்டும்.
தற்போதும் சட்டப்படி நானே பதில் வைத்திய அத்தியட்சகர்.எனவே மக்கள் பதற்றமடையவோ, குழப்பமடையவோ தேவையில்லை. மக்கள் என் மீது வைத்த அன்புக்கு நன்றி.
நான் மீண்டும் வருவேன்" என தெரிவித்திருந்தார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நிலவி வரும் குழப்பமான நிலையிலேயே தற்போது புதிய வைத்திய அத்தியட்சகர் நியமனம் இடம்பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |