ஜேர்மனியில் புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள குடியுரிமை சட்டங்கள்
ஜேர்மனியில் வாழ்ந்துவரும் வெளிநாட்டவர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த ஜேர்மனியின் புதிய குடியுரிமை விதிகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த விதிகள் நேற்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.
ஜேர்மன் குடியுரிமை பெற விரும்பும் வெளிநாட்டவர்கள், இனி தங்கள் முந்தைய குடியுரிமையை துறக்கவேண்டியதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு எட்டு ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்திருக்கவேண்டும் என்பது மாற்றப்பட்டு, இனி ஐந்து ஆண்டுகள் சட்டப்பூர்வமாக ஜேர்மனியில் வாழ்ந்த வெளிநாட்டவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஜேர்மன் மொழியைக் கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், கல்வியில் அல்லது தொழிலில் சிறந்து விளங்குதல், பொது வாழ்வில் ஈடுபடுதல் அல்லது அரசியலில் பங்கேற்றல் போன்ற சிறப்பு தகுதிகளையுடையோர், இனி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு குடியுரிமை பெறுலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டு பெற்றோருக்கு பிறக்கும் அனைத்து குழந்தைகளும் எதிர்காலத்தில் ஜேர்மன் குடியுரிமையைப் பெறுவார்கள்.
ஜேர்மன் மொழ்யில் பேசும் திறன்
ஆனால் பெற்றோரில் ஒருவராவது ஜேர்மனியில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பூர்வமாக வாழ்ந்து, நிரந்தர குடியிருப்பு அனுமதியைப் பெற்றிருக்கவேண்டும் என்ற ஒரு நிபந்தனையும் உள்ளது.
1960 களில் மேற்கு ஜேர்மனிக்கு வேலை செய்வதற்காக குடிபெயர்ந்த துருக்கி நாட்டவர்கள் குடியுரிமை பெற இனி தேர்வு எழுதவேண்டியதில்லை. மாறாக ஜேர்மன் குடியுரிமையைப் பெற அவர்கள் ஜேர்மன் மொழியில் பேசும் திறனை நிரூபித்தால் போதும் என குறிப்பிடப்படுகிறது.
இதேபோல் கிழக்கு ஜேர்மனிக்கு வேலைக்காக சென்ற வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் இந்த விதி பொருந்தும்.
குறிப்பாக யூத விரோத , இனவெறி அல்லது பிற மனிதாபிமானமற்ற செயல்களைச் செய்ததாகக் கண்டறியப்பட்டவர்கள், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமைகளை நிராகரிப்பவர்கள் அல்லது பலதர திருமணம் செய்து கொண்டவர்கள் ஆகியோர் ஜேர்மன் கடவுச்சீட்டு பெற தகுதியற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |