தென் சூடான் தேர்தலில் புதிய மாற்றம்: தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீக்கம்
தென் சூடானில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், அந்நாட்டின் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மாற்றப்பட்டுள்ளார்.
அந்த நாட்டின் ஜனாதிபதி சல்வா கீர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக இருந்த அபேத்னெகோ அகோக் கச்சுவோலை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கி, அவருக்குப் பதிலாக ஆணைக்குழுவின் பொதுச்செயலாளராகப் பணியாற்றிய கேப்ரியல் போல் டெங்கை புதிய தலைவராக நியமித்துள்ளார்.
தலைவர் பதவியிலிருந்து நீக்கம்
இதற்கான அறிவிப்பு அரசாங்கத் தொலைக்காட்சி ஊடாக வெளியிடப்பட்ட போதிலும், இந்தத் திடீர் மாற்றத்திற்கான காரணங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

2011 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் தென் சூடானில் நடத்தப்படும் முதலாவது பொதுத் தேர்தல் இதுவாகும். டிசம்பர் 22 ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், கடைசி நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நியமனம் வாக்காளர்களின் நம்பிக்கையைக் குறைக்கக்கூடும் எனச் சிவில் சமூக அமைப்புகள் அச்சம் வெளியிட்டுள்ளன.
அத்துடன், நியாயமான மற்றும் அமைதியான முறையிலான தேர்தலை நடத்துவதற்கான போதிய சூழல் இன்னும் அங்கு உருவாகவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் சுட்டிக்காட்டியுள்ளது.