சர்வதேச நாணய நிதியத்துடனான புதிய ஒப்பந்தம் குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது நடைமுறையில் உள்ள விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டம் 2027 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த பின்னர், இலங்கையின் எதிர்கால ஈடுபாடு குறித்து மதிப்பீடு செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (12.11.2026) சமர்ப்பித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய ஐஎம்எப் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதுடன், நாட்டின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குழு ஆராயவுள்ள விடயம்
2027 மார்ச்சுக்குப் பின்னர் ஐஎம்எப் உடன் புதிய ஒப்பந்தமொன்று அவசியமா என்பதையும், அவ்வாறு தேவைப்பட்டால் நாட்டுக்கு மிகவும் பொருத்தமான ஒப்பந்த வகை எது என்பதையும் நியமிக்கப்பட்ட குழு ஆராயும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை, 2032ஆம் ஆண்டளவில் நாட்டின் பொதுக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 87 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐஎம்எப் திட்டத்தின் கீழ் ஆரம்பத்தில் 2032ஆம் ஆண்டுக்குள் பொதுக் கடனை 95 சதவீதமாகக் குறைப்பதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போதைய பொருளாதாரப் போக்குகள் தொடர்ந்தால் அது 87 சதவீதமாகக் குறையக்கூடும் என ஐஎம்எப் இன் ஆறாவது மீளாய்வு சுட்டிக்காட்டியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், வரி அடித்தளத்தை விரிவுபடுத்துதல், வரி விலக்குகளைச் சீரமைத்தல் மற்றும் வரி நிர்வாகத்தை டிஜிட்டல் மயமாக்குதல் உள்ளிட்ட சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார். நாட்டின் எதிர்கால அபிவிருத்தித் தேவைகளுக்கு ஏற்ற வகையில் அரச இயந்திரத்தை மறுசீரமைப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
வினைத்திறன் மிக்க அரச நிர்வாகம்
பாரம்பரிய அரச நிர்வாகக் கட்டமைப்பின் ஊடாக எதிர்பார்க்கப்படும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது எனவும், வினைத்திறன் மிக்க அரச நிர்வாகம் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், 2.3 சதவீத முதன்மை வரவு செலவுத் திட்ட உபரியைப் பேணுவதுடன், ஒட்டுமொத்த வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை 5 சதவீதமாகக் கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு எனத் தெரிவித்தார்.
அரச செலவினம் 13.6 சதவீதமாகவும், பொதுத்துறை முதலீடு 4 சதவீதமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
நிதி ஒழுக்கத்தைப் பேணுதல், அரச நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் நிலையான பொருளாதார அபிவிருத்திக்கான சூழலை உருவாக்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு அரசாங்கத்தின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் கிழக்கே வங்காள வளைகுடா கடல் பகுதியில் கொந்தளிப்பு! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பாக்ஸ் ஆபிஸ்: 6 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே சூர்யாவின் சீன் படம் எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri