சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக நியமிக்க பேச்சுவார்த்தை
நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளைய தினம் பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அடுத்த ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
இதனிடையே, ஜனாதிபதி பதவிக்கு வேறு எந்த கட்சியும் யாரையும் முன்னிறுத்தவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இரகசிய வாக்கெடுப்பு
ஜனாதிபதி பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் முன்மொழியப்பட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
இதன் காரணமாக வாக்கெடுப்புக்கு செல்லாமலேயே சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக நியமிப்பதற்கான இந்த கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை ஜனாதிபதியாக நியமிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.