நீர்கொழும்பு பிடிபன கடற்றொழில் துறைமுகம் அதிகாரச் சபையிடம் ஒப்படைக்கப்படும்: கர்தினால் உறுதி
நீர்கொழும்பு பிடிபன கடற்றொழில் துறைமுகம் அதிகாரச் சபையிடம் ஒப்படைக்கப்படும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் உறுதியளித்துள்ளார்.
இதன் மூலம் அந்த பகுதியின் கடற்றொழிலாளர்கள் அதிகபட்ச பயன் பெறுவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிப்படைத் தன்மை
கர்தினாலுக்கு எந்த நேரத்திலும் சொத்தை தனது தனிப்பட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் எண்ணம் இருந்ததில்லை" என்று கர்தினாலின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பேராயரின் சபைக்கு முன்பாக கடற்றொழிலாளர்கள் என கூறிக்கொள்ளும் குழுவினர் நேற்று நடத்திய போராட்டம் தொடர்பில் பெர்னாண்டோ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடற்றொழில் துறைமுகத்தை கர்தினால் ரஞ்சித் பலவந்தமாக கையகப்படுத்தியதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
எனினும் கடற்றொழில்துறைமுக நிர்வாகத்திற்கு வரும்போது வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் முகமாகவே கர்தினால் சட்ட நடவடிக்கையை மேற்கொண்டதாக அருட்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
சட்டநடவடிக்கை
ஒருசில பேர் மாத்திரம் அதிலிருந்து பயனடைவதை கர்தினால் விரும்பவில்லை என்று சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் .
1963இல் கர்தினால் தோமஸ் குரேயினால் சில நிபந்தனைகளுடன் கடற்றொழில் துறைமுகம் ஐக்கிய கடற்றொழில் சங்கத்திடம் அன்பளிப்பாக ஒப்படைக்கப்பட்டது.
எனினும், கடற்றொழில் சங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரு சிலரால் இந்த நிபந்தனைகள் மீறப்பட்டதை அடுத்தே சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டதாக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |