கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நிறுவனங்கள் : அரசாங்கம் மறைக்கும் உண்மைகள் அம்பலம்
இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடி சம்பவங்கள் காரணமாக கருப்புப் பட்டியலில் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் குறித்த தகவல்களை அரசாங்கம் மறைத்து வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 105 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் அனுராதபுரம், கெபிதிகொல்லேவ, முஸ்லிம் அட்டவீரவெவ மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(19) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தரவுத்தளம் எமது நாட்டில் இல்லை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
டெண்டர் முறை மற்றும் கொள்முதல் முறைக்கு மாறாக ஊழல் மற்றும் மோசடியான, இலஞ்சம் வழங்கி கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளன.
உலகின் பிற நாடுகளில் உள்ள இதுபோன்ற நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை இனம்கண்டு நாட்டு மக்களுக்கு பொதுவான வழிமுறைகள் மூலம் தெரியப்படுத்துகின்றனர்.
நேபாளத்தில் 629 நிறுவனங்களும் பங்களாதேஷில் 510 நிறுவனங்களும் இவ்வாறு இனம்காணப்பட்டு கருப்பு பட்டியல் படுத்தப்பட்டு வெளிக்கொணரப்பட்டுள்ளது.
டெண்டர் மோசடிகள் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்ட, இந்நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்காத தெற்காசியாவின் ஒரே நாடு இலங்கை மட்டுமே. இவ்வாறான கருப்புப் பட்டியல்கள் தொடர்பான தரவுத்தளம் எமது நாட்டில் இல்லை.
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இந்த முறை மாற்றப்படும். ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் திருட்டு, மோசடி காரணமாக கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் ஒவ்வொரு நிறுனங்கள் தொடர்பான தகவல்களும் பொதுத் தரவுத்தளம் மூலம் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தப்படும்.
இத்தகைய கருப்புப்பட்டியலில் உள்ள நிறுவனத்துடன் அரசாங்கம் ஒப்பந்தம் செய்து கொண்டால், வரி செலுத்தும் மக்களுக்கு அது குறித்து அறிய உரிமை உண்டு. இந்த உரிமையை மக்களுக்கு பெற்றுத் தரப்படும் என குறிப்பிட்டுள்ளார்.