இலங்கையின் முக்கிய வங்கியில் பாரிய உள்மோசடி - வாடிக்கையாளர்களுக்கு அவசர அறிவுறுத்தல்
வங்கி ஊழியர்கள் மற்றும் மூன்றாம் தரப்பினரால் சமீபத்தில் பதிவான உள்மோசடி சம்பவத்தால் ஏற்பட்ட மதிப்பிடப்பட்ட இழப்பு சுமார் ரூ. 13.2 பில்லியன் தொகை என்று தேசிய அபிவிருத்தி வங்கி (NDB Bank) தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், வாடிக்கையாளர் வைப்புத்தொகைகள் பாதிக்கப்படாமல் இருப்பதையும், வங்கிச் செயல்பாடுகள் வழக்கம் போல் தொடர்வதையும் வங்கி உறுதி செய்துள்ளது.
உள்மோசடி
இது குறித்து தேசிய அபிவிருத்தி வங்கி (NDB Bank)ஏப்ரல் 6 இன்று வெளியிடப்பட்ட அறிக்கையொன்றினை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது. அந்த அறிக்கையில்,

இந்த மோசடி ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டுப் பகுதிக்குள் மட்டுமே நிகழ்ந்ததாகவும், இதில் சில ஊழியர்கள் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டதாக வங்கி தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தை மிக அவதானத்துடன் கையாள்வதாகவும், நிதியை மீட்க சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் கூறியுள்ளது.
சம்பந்தப்பட்ட அனைத்து ஊழியர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டு, அவர்களின் கணினி அமைப்பு அணுகல் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மோசடியுடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கிக்கு தகவல்
பாதிக்கப்பட்ட செயல்பாட்டுப் பிரிவு, திருத்தப்பட்ட அறிக்கை கட்டமைப்புகள் மற்றும் நிறுவனம் முழுவதும் மேம்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளுடன் தனி மேற்பார்வையின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் காரணமாக, 31 மார்ச் 2026 நிலவரப்படி அதன் மொத்த சொத்து மதிப்பு சுமார் 0.7 சதவீதம் பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
மேலும், இலங்கை மத்திய வங்கிக்கு முழுமையாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், போதுமான பணப்புழக்கம் மற்றும் மூலதனத்தை உறுதி செய்வதற்கும், நிலையான தன்மையை பேணுவதற்கும் ஒழுங்குமுறை ஆதரவையும் மேற்பார்வையையும் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், 6 ஏப்ரல் 2026 அன்று பங்குதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரொக்க ஈவுத்தொகையை (Cash Dividend)நிறுத்தி வைக்குமாறும், அதே நேரத்தில் பங்கு ஈவுத்தொகையைத் திட்டமிட்டபடி தொடர அனுமதிக்குமாறும் மத்திய வங்கி வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல்
வாடிக்கையாளர்களின் இருப்புத்தொகைகள் அப்படியே பாதுகாப்பாக இருப்பதாகவும், இயல்பான வங்கிச் செயல்பாடுகள் எந்த இடையூறும் இன்றித் தொடர்வதாகவும் NDB மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மேலும், சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை NDB வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
மேலதிக விளக்கம் கோரும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள NDB கிளைகள், அவசர இலக்கம் அல்லது வங்கி மேலாளர்கள் அல்லது 011 744 8850 என்ற வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் தகவல்களை தெளிவுபடுத்திக்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களை வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கை முழுவதும் உயர் வெப்பநிலை எச்சரிக்கை நிலை..! வெளியில் செல்வதில் அவதானம் - மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

