தீயினால் சேதமடைந்த பொத்குல் ரஜமகா விகாரை விடுதியைப் பார்வையிட்ட வடமேல் மாகாண ஆளுநர்
திடீர் தீவிபத்தினால் சேதமடைந்த தளுபொதகம வரலாற்று முக்கியத்துவமிக்க புராதன பொத்குல் ரஜமகா விகாரையின் சேதங்களை கௌரவ ஆளுநர் நஸீர் அஹமட் (Naseer Ahamed) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
குறித்த விகாரைக்கு அவர் இன்று(20.05.2024) விஜயம் மேற்கொண்டுள்ளார்.
சேதமடைந்திருந்த விடுதி
தளபொதகம புராதன பொத்குல் விகாரையின் பிக்குமார் விடுதி கடந்த 18ம் திகதி திடீர் தீவிபத்தினால் சேதமடைந்திருந்த போது விடுதியும் அதனுள் இருந்த பெறுமதியான பொருட்களும் புத்தகங்களும் இதன் போது தீயினால் சேதமடைந்துள்ளன.
இதன்போது, விகாரையின் விகாராதிபதி சாஸ்திரபதி வெலிபிடியே பஞ்ஞாசார தேரரைச் சந்தித்து, தீயினால் ஏற்பட்ட சேதங்களையும் கேட்டறிந்து கொண்டார்.
தீ விபத்தினால் விடுதி மட்டுமல்லாது ஏராளமான புத்தகங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களும் எரிந்து நாசமாகி உள்ளதாக தேரர் குறிப்பிட்டிருந்தார்.
விகாரையின் சீரமைப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கௌரவ ஆளுநர் அவர்கள் துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறித்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
சீரமைப்பு பணிகள்
இந்நிலையில் விகாரையின் சேதங்களை சீரமைப்பதற்குத் தேவையான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த கௌரவ ஆளுநர், சேத மதிப்பீடு மற்றும் சீரமைப்பு பணிகளுக்கான உத்தேச மதிப்பீட்டு அறிக்கை ஒன்றையும் உடனடியாக தமக்குப் பெற்றுத் தருமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் மட்டுமன்றி தேவை ஏற்பட்டால் ஜனாதிபதி நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொடுக்கவும் தான் நடவடிக்கை மேற்கொள்வதாக ஆளுநர் இதன் போது உறுதியளித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன, வடமேல் மாகாண பிரதம செயலாளர் தீபிகா குணரத்ன உள்ளிட்ட பலரும் இதன் போது தீ விபத்து நடப்திருந்த இடத்திற்கு சமூகமளித்திருந்தனர்.
இந்த தளபொதகம புராதன பொத்குல் விகாரையானது கி.பி. 1702ம் ஆண்டளவில் கீர்த்தி ஶ்ரீ ராஜங்க மன்னன் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டது என்பதுடன் கி.பி 1886ம் ஆண்டு புனித திரிபீடகம் பாதுகாக்கப்பட்ட எட்டு விகாரைகளில் ஒன்றாகும் என்றும் வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |