தமிழர் நினைவேந்தல்களுக்கு இடையூறு செய்வது மனிதாபிமானமற்ற செயல் : நவ சமசமாஜக் கட்சி
யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூரும் தமிழ் மக்களின் உரிமையை தடுக்கும் மனிதாபிமானமற்ற செயற்பாட்டை அரசாங்கம் கைவிட வேண்டுமென தென்னிலங்கையில் உள்ள இடதுசாரி கட்சியொன்று வலியுறுத்தியுள்ளது.
வடக்கு, கிழக்கில் நீதி, நியாயம் மற்றும் நீதிக்கான போராட்டத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரும் நடவடிக்கை மேற்கொள்வதை தடுக்க, அரசாங்கத்தின் உத்தரவின் பேரில், பாதுகாப்புப் படையினரும் காவல்துறையும் நடவடிக்கை எடுத்து வருவதாக நவ சமசமாஜக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தேசிய உரிமைகளுக்கு மதிப்பளித்து செயற்படுமாறும், தமிழ் மக்கள் தமது உரிமைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு மனிதாபிமானமற்ற முறையில் இடையூறு விளைவிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளை கேட்டுக் கொள்வதாக, நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் விக்கிரமபாகு கருணாரத்ன விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் எனப்படுவது தனிப்பட்ட விடயம் அல்ல எனத் தெரிவித்துள்ள பேராசிரியர் விக்ரமபாகு கருணாரத்ன, தமது தேசத்தையும் மதத்தையும் கடைப்பிடிதற்கு மக்களுக்கு உரிமை உண்டு என்பதை ராஜபக்ச அரசாங்கத்திற்கு நினைவூட்டுவதாகவும், இந்த செயற்பாடுகளுக்கு சவால் விடுக்கப்பட்டடாலோ? அல்லது இடையூறு விளைவிக்கப்பட்டாலோ அதற்காக போராடுவதற்கு அந்த மக்களுக்கு நியாயமான உரிமை உண்டு எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயத்தை ஆதரிக்கும் ஏனைய மக்களின் உரிமையும் இதில் அடங்கும் எனவும், அதற்கு தடையாக இருந்தால், அந்த நாட்டை ஜனநாயக ரீதியாக செயற்படும் நாடாக அங்கீகரிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அனைத்து மக்களினதும் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் நவ சமசமாஜக் கட்சி, இந்த தடைகளுக்கு எதிராக தமது சுதந்திரத்திற்காக ஒழுங்கமைக்கப்பட்டு போராடியவர்கள் இந்நாட்டு மக்களே என சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய உரிமை என்பது அதற்காக குரல் கொடுப்பது மாத்திரமல்ல எனவும், அமைப்பு ரீதியாக போராடுவதற்கும் உரிமையுண்டு எனவும், சர்வதேச அளவில் ஒரு தேசமாக தம்மை பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமைக்காக பிரச்சாரம் செய்வது சர்வதேச மனித சமூகத்தின் உரிமையும் கூட, என நவ சமசமாஜக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகள் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |