இலங்கையில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள இயற்கை விவசாயம்! - நியூயோர்க் டைம்ஸ்
விவசாயிகளை தயார்ப்படுத்தாமல் இயற்கை விவசாயத்தில் இலங்கையின் ஈடுபாடு அழிவை ஏற்படுத்தி வருவதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் உணவுப் பொருட்களின் விலைகள் வேகமாக உயர்ந்து வருகின்றன என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, கடந்த வருடத்தில் மரக்கறிகளின் விலை மூன்று மடங்காகவும், அதற்கு முந்தைய ஆண்டில் சில மரக்கறிகள் மூன்று மடங்காகவும் அதிகரித்துள்ளன.
இந்த ஆண்டு நடவு செய்த 85 வீத விவசாயிகள் அடுத்த பருவத்தில் அறுவடை குறையும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்றும் அவர்களில் பாதி பேர் விளைச்சல் 40 வீதம் குறையும் என்று அஞ்சுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய வெளியிடப்பட்ட வர்த்தமானியின்படி இரசாயன பசளை இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் இந்த யோசனை ஏழு மாதங்களுக்கு மட்டுமே நீடித்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் மத்திய வங்கியின் கூற்றுப்படி, அரிசி போன்ற சில உணவுப் பொருட்களின் விலைகள், ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கால் அதிகரித்துள்ளன.
தக்காளி, கேரட் போன்ற காய்கறிகளின் விலை கடந்த ஆண்டை விட ஐந்து மடங்கு உயர்ந்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.