வலிகாமம் வடக்கு பகுதியில் பொது மக்களுடைய காணிகளை விடுவிக்காத அரசாங்கம்: எழுந்துள்ள குற்றச்சாட்டு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடங்கள் ஆகியும் வலிகாமம் வடக்கு பகுதியில் பொது மக்களுடைய காணிகளை இதுவரை விடுதலை செய்யவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் பிராஜா அபிலாஷா வலையமைப்பின் வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் ,இதனை தெரிவித்துள்ளார்.
வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொது மக்களுடைய காணிகள் விடுதலை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடங்கள் ஆகியும் வலிகாமம் வடக்கு பகுதியில் பொது மக்களுடைய காணிகளை இதுவரை விடுதலை செய்யவில்லை.மாறாக கடந்த காலத்தில் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் முன்வைத்த காணிகளே விடுதலை செய்யப்பட்டுள்ளது.
இந்த அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் பொதுமக்களுடைய காணிகள் பொதுமக்களுக்கு மீளவும் வழங்கப்படும் என தற்போதுள்ள ஜனாதிபதி பிரச்சார காலத்தின் போது தெரிவித்திருந்தார்.
குறிப்பாக இந்த அரசாங்கம் காணிகளை விடுவிப்பதாக கூறிக்கொண்டு 764 இலக்க பேருந்து வழித்தடத்தினை முற்றாகத் திறந்து விட்டு காணிகளை விடுவித்ததாக சர்வதேசத்திற்கு காட்டிக்கொள்கின்றது.
மக்களும் குறித்த பலாலி வீதியால் சென்று வருவதால் அவர்களுக்கும் ஏனைய காணிகள் தொடர்பில் அக்கறை இருக்கவில்லை.
மக்களுடைய காணிகள் தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வளையப்பகுதியில் இருப்பதால் காணி உரிமையாளர்கள் அயல் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் தொடர்ந்தும் 35 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.
மக்கள் தொடர்ந்து காணிகளுக்காக போராடி வருகின்றனர். எனவே இந்த அரசாங்கம் மக்களுடைய காணிகளை விடுவித்து தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சம்
அத்துடன் பலாலியில் இராணுவத்தின் மருத்துவ முகாம் அமைந்துள்ள காணியில் கைவிடப்பட்டிருந்த கட்டுமான வேலைகள் தற்பொழுது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காணிகள் விடுவிக்கப்படமாட்டாதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் தற்பொழுது எழுந்துள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வின் போது இந்த விடயம் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்த பொழுதும் உயர் பாதுகாப்பு வளையத்தில் அந்த கட்டட பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
அத்துடன் மயிலிட்டி பகுதியில் கடல் மார்க்கமாக போதைப்பொருள்களை கடத்துவதை தடுக்கும் முகமாக றாடர் அமைப்பதற்காக காணி சுவீகரிக்கும் நடவடிக்கையில் கடற்படை ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மக்களுடைய காலில் இவ்வாறு றாடர் அமைப்பதற்கு நாங்கள் ஒருபொழுதும் அனுமதிக்கபோவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



