பணத்திற்காக தேசிய அடையாள அட்டைகள் மற்றும் வாகன பதிவு சான்றிதழ்கள் விற்பனை
பணத்திற்காக போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள், தேசிய அடையாள அட்டைகள் மற்றும் வாகனப்பதிவு சான்றிதழ்களை விற்பனை செய்த கும்பலில் ஈடுபட்டிருந்த இரண்டு நபர்களை குற்றப்புலனாய்வுப்பிரிவு கைது செய்துள்ளது.
நாரஹேன்பிட்டவில் உள்ள மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்களத்திற்கு அருகிலுள்ள ஒரு வீட்டிலிருந்து இந்த கும்பல் இயங்கிவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது
சந்தேகநபர்களை கைது செய்தபோது, அவர்களிடமிருந்து 12 போலி சாரதி உரிமங்கள், 8 தேசிய அடையாள அட்டைகள், 8 தற்காலிக சாரதி உரிமங்கள் மற்றும் 4 வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நுகேகொடை பொலிஸ் பிரிவில் குற்றத்தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று, வெலிக்கடை பொலிஸ் பிரிவில் ஒருவரிடம் இருந்த தற்காலிக சாரதி உரிமம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளது.
நாரஹேன்பிட்ட பகுதியில் உள்ள ஒரு நபரிடமிருந்து ரூ. 4,000 க்கு அந்த உரிமத்தை வாங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, மேலதிக விசாரணையின் போது, நாரஹேன்பிட்டவில் உள்ள மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்களத்திற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் பொலிஸ் அதிகாரிகள் சோதனை நடத்தி அதன் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.
குற்றப்புலனாய்வுப்பிரிவு விசாரணை
வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, போலியான சாரதி உரிமங்கள், தேசிய அடையாள அட்டைகள், தற்காலிக சாரதி உரிமங்கள் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த விசாரணையின் போது, சந்தேகநபர் ஆவணங்களை மிகவும் கவனமாகத் தயாரித்து, அவற்றை வாங்க வந்த மக்களின் தேவைகளைப் பொறுத்து ரூ. 7,500 முதல் ரூ. 7,500 வரையிலான விலைகளில் விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் அங்கொட மற்றும் நாரஹேன்பிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள்; இவர்களின் வயது 32 முதல் 52 வரை ஆகும்.
இந்த சம்பவம் குறித்து நுகேகொடை பிரதேச குற்றப்புலனாய்வுப்பிரிவு மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றது.