சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு பதிலாக தேசிய அரசாங்கம்
சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்கும் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளதாகவும் அதற்கு பதிலாக தேசிய அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய அரசாங்கத்தை அமைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
தேசிய அரசாங்கத்தில் மொத்தமாக 72 அமைச்சர்கள்
அமைக்கப்பட உள்ள தேசிய அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக இணைந்துக்கொள்ள உள்ளதுடன் அவர்களுக்கு அரசாங்கத்தில் பதவிகள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை 42 ஆக அதிகரிக்க முடியும் என்பதுடன் அமைச்சரவை அந்தஸ்தற்ற 30 அமைச்சர்களை நியமிக்க முடியும். புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை அடுத்த வாரம் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய முகங்களையே அரசாங்கம் அமைச்சரவைக்கு நியமிக்க போகிறது
எது எப்படி இருந்த போதிலும் சர்வக்கட்சி மற்றும் தேசிய அரசாங்கம் என்ற பெயரில் பழைய முகங்களை கொண்ட அமைச்சரவையே நியமிக்கப்பட போகிறது எனவும் இது போராட்டகாரர்களின் கோரிக்கைக்கு முற்றிலும் எதிரானது எனவும் எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.
சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைய போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய பிரதான எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
எனினும் ஐக்கிய மக்கள் சக்தியில் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைய தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.