நீதியமைச்சின் மோசடியை அம்பலப்படுத்திய சட்டத்தரணி அச்சலா!
சுயாதீன நீதிமன்றம் அமைப்பது தொடர்பில் நீதியமைச்சில் கோரப்பட்ட தகவல்களுக்கு மோசடியான முறையில் திகதி மாற்றப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக சட்டத்தணி அச்சலா செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்கள் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சார்பாக வாதாடும் குறித்த சட்டத்தரணி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேற்கொண்ட விசாரணைக்கு பதிலளிக்கும் விதமாக, கடிதம் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளதாக தனது சமூக ஊடக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
திகதி மாற்றப்பட்ட மோசடி
அதில் குறிப்பிட்டுள்ளதாவது, *நான் 19/12/2025 அன்று நீதியமைச்சின் தகவல் அதிகாரிக்கு சுயாதீன நீதிமன்றம் பற்றிய தகவல்களைக் கோரி ஒரு விண்ணப்பத்தை அனுப்பினேன். ஆனால் எனக்கு எந்த பதிலும் அல்லது கோரிக்கையும் வரவில்லை.
* 21/01/2026 அன்று, சட்டமா அதிபருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அருகே அமைதியான போராட்டம் நடத்தப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் நான் உரையாற்றும் போது, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிய RTIக்கு கூட எந்த பதிலும் இல்லை என்று கூறினேன்.
அதன் பின்னர் நீதியமைச்சு 2025/12/19 அன்று நான் அனுப்பிய RTI கடிதம், 2025/12/22 அன்று கிடைத்ததாகவும் 2025/12/29 திகதியிட்ட கடிதம் ஒன்று எனக்கு 2026/01/25 அன்று தபால் மூலம் வந்தது.
2025/12/29 அன்று அனுப்பப்பட்ட கடிதம், நீதி அமைச்சின் அடுத்த வேலியில் உள்ள எனது முகவரியை அடைய ஒரு மாதம் எடுத்துக் கொண்டுள்ளது.ஆனால் அதில் தபால் முத்திரை திகதி 2026/01/22 என அச்சிடிப்பட்டிருந்தது.
நான் அன்று பேசியதில் ஏதும் பிரச்சினை நடக்கலாம் என நினைத்து அவசரமாக இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.சட்டத்தைப் பாதுகாக்கவும் சட்டத்தை சீர்திருத்தவும் வேண்டியவர்கள் இவ்வாறான மோசடியில் ஈடுபடுவது ஏற்றுக் கொள்ள முடியாதது என குறிப்பிட்டுள்ளார்.