எரிவாயு பிரச்சினை ஓரளவுக்கு தீர்க்கப்பட்டுள்ளது:பொதுஜன பெரமுன
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை நூற்று நூறு வீதம் தீர்க்கப்படாவிட்டாலும் பிரதானமாக இருந்து வந்த பிரச்சினைகளுக்கு ஓரளவுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
எமக்கு இருந்து வந்த பிரதான பிரச்சினை சமையல் எரிவாயு பிரச்சினை. இந்த பிரச்சினைக்கு நூற்றுக்கு நூறு வீதம் தீர்வுகாணப்படாவிட்டாலும் மக்களுக்கு தேவையான வகையில் அதனை விநியோகிக்க முடிந்துள்ளது.
எரிவாயு விநியோகம் சீராக நடைபெற்று வருவதுடன் தேவையானவர்கள் அதனை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. மொட்டுக்கட்சி அரசாங்கமே நாட்டின் பொருளாதாரத்தை அழித்ததாக எம்மீது குற்றம் சுமத்துகின்றனர்.
குற்றம் சுமத்தும் போது, நாங்கள் தப்பியோடாது, அவை பற்றி பேசிக்கொண்டிருக்காது நாங்கள் தீர்வுகளை தேடிக்கொண்டிருக்கின்றோம். உலகம் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமை, டொலர் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் நாங்கள் எரிவாயு பிரச்சினைக்கு தீர்வுகண்டுள்ளோம் என்பது எமது நம்பிக்கை.
அதேபோல் எரிபொருள் பிரச்சினைக்கு நூற்றுக்கு நூறு வீதம் தீர்வுகாணப்படாவிட்டாலும் ஓரளவுக்கு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எதிரணிகளுக்கும் சந்தர்ப்பவாத அரசியல் அணிகளுக்கு இருந்து வந்த தலைப்புகள், அரசாங்கத்தை கவிழ்த்து எந்த வழியிலாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்று எண்ணும் அணிகளுக்கு இருந்து வந்த தலைப்புகளான எரிபொருள் வரிசை, எரிவாயு வரிசை என்பவற்றை இல்லாமல் செய்துள்ளோம்.
இயல்பு வாழ்க்கையை ஏற்கனவே இருந்த மட்டத்திற்கு கொண்டு செல்ல முடியாவிட்டாலும் ஓரளவுக்கு முன்நோக்கி கொண்டு செல்ல எமக்கு பலம் கிடைத்துள்ளது. எரிபொருளை சாதாரண மட்டத்தில் பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டங்களை உருவாக்கி வருகின்றோம்.
சஜித் மற்றும் அனுரகுமாரவிடம் வேலைத்திட்டங்கள் இல்லை
அனுரகுமார திஸாநாயக்கவிடம் வேலைத்திட்டங்கள் இல்லை. அனுரகுமார வாயில் வந்தவற்றை எல்லாம் பேசுவார். சஜித் பிரேமதாசவிடமும் வேலைத்திட்டங்கள் இல்லை.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவிடம் வேலைத்திட்டங்கள் இருந்தது. இவர் அவரது மகனா என்ற கேள்வியும் இருக்கின்றது. ஆனால், இவர்களை போல் கூறிக்கொண்டிருக்க முடியாது.
கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு அவரை பதவியில் இருந்து விலகுமாறு இளைஞர்கள் கூறவில்லை.
முகாமைத்துவ நிர்வாக மட்டத்தில் சில குறைப்பாடுகள் இருந்தன. ரணில் விக்ரமசிங்கவை தாருங்கள், சஜித் பிரேமதாசவை தாருங்கள், அனுரகுமாரவை தாருங்கள் என்று உண்மையான போராட்டகாரர்கள் கூறவில்லை.
அடுத்த நடவடிக்கை என்ன என்று அவர்கள் கூறவில்லை. கோட்டாபய ராஜபக்சவை வெளியேறுமாறே கூறினர். உணரும் பிரச்சினைகளே இதற்கு காரணம். வாகனங்களை கொள்வனவு செய்ய வேண்டும் என நினைப்பவருக்கு கொள்வனவு செய்ய வாகனங்கள் இல்லை.
எரிபொருள் இல்லாமல், வரிசையில் நிற்கும் போது உண்மையான பிரச்சினை ஏற்பட்டன. இதன் காரணமாகவே அவர்கள் வெளியில் வந்து போராடினர். ஆனால், அரசாங்கம் வேலைத்திட்டங்களை உருவாக்கி பிரச்சினைகளுக்கு சிறிது சிறிதாக தீர்வுகளை கண்டு வருகிறது எனவும் திஸ்ஸ குட்டியராச்சி கூறியுள்ளார்.