தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!
நாட்டின் ஏற்றுமதித் துறையை வலுப்படுத்தி, நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவதை நோக்கமாகக் கொண்ட 'தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (2026–2030)' ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவியுடன் இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி வருவாய் இலக்கு
அரச மற்றும் தனியார் துறையின் 300க்கும் மேற்பட்ட தரப்பினரின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு கடந்த மே 4 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
'வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற தேசிய தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, 2030 ஆம் ஆண்டிற்குள் 36 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாய் இலக்கை அடைவதே இதன் பிரதான நோக்கமாகும்.

இலங்கையை உலகளாவிய சந்தைக்கான போட்டித்தன்மைமிக்க விநியோகச் சங்கிலி மற்றும் அறிவு சார்ந்த ஏற்றுமதி மையமாக மாற்றுவதற்காக இத்திட்டம் இரு முக்கிய தூண்களின் கீழ் வகுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஏற்றுமதி பன்முகப்படுத்தல் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளை அதிகரிப்பதற்காக மோட்டார் வாகன உதிரிபாகங்கள், கனிம மற்றும் இறப்பர் சார்ந்த கைத்தொழில்கள், கடல்சார் கைத்தொழில்கள், மசாலாப் பொருட்கள், டிஜிட்டல் தயாரிப்புகள், மின்-மின்னணு உதிரிப்பாகங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் பானங்கள் ஆகிய 8 முன்னுரிமைத் துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் அமைச்சர்களான அனில் ஜயந்த பெர்னாண்டோ, சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.