தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி தொகையில் ஏற்பட்ட பாரிய அதிகரிப்பு!கோப் குழு வெளிப்படுத்தல்..
தேசிய அபிவிருத்தி வங்கி (National Development Bank) மோசடியில் வங்கி ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டதை விட தொகையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) குறிப்பிடுவதன்படி, இறுதி கணக்காய்வு அறிக்கையின் மூலம் அடையாளம் காணப்பட்ட இழப்பு 13,639,664,684 ரூபாயாகும் (சுமார் 13.6 பில்லியன் ரூபாய்).
2026 ஏப்ரல் 6 ஆம் திகதி NDB வங்கி முதன்முதலில் வெளிப்படுத்திய தொகையுடன் ஒப்பிடுகையில், இந்தத் தொகை 13.2 பில்லியன் ரூபாயிலிருந்து 13.6 பில்லியன் ரூபாய் வரை 0.4 பில்லியன் ரூபாயினால் அதிகரித்துள்ளது.
2026 ஜூன் 22 ஆம் திகதியிட்ட இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் ஜூன் 26 ஆம் திகதி வெளியிட்ட தகவல்களுடன் ஒப்பிடுகையில், இறுதி அறிக்கையின் மூலம் மேலும் 60 மில்லியன் ரூபாய் அதிகரித்துள்ளது.
கணக்காய்வு அறிக்கையிலுள்ள தகவல்கள்
இந்தத் கணக்காய்வு அறிக்கை 2016 ஏப்ரல் 1 முதல் 2026 மார்ச் 31 வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கியுள்ளது. NDB வங்கி 2026 செப்டம்பர் 29 அன்று வெளியிட்ட தகவல்களின் படி, மோசடியின் நிதித் தாக்கம்:
2025 ஜனவரி 1 க்கு முன்: 1.5 பில்லியன் ரூபாய் -2025 ஆம் ஆண்டில்: 9.6 பில்லியன் ரூபாய் -2026 மார்ச் 31 இல் முடிவடைந்த காலாண்டில்: 2.5 பில்லியன் ரூபாய்.
இந்த மோசடி காரணமாக வாடிக்கையாளர்களின் எந்தவொரு கணக்குகளுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என முன்னர் தெரிவிக்கப்பட்ட கூற்று இறுதி அறிக்கையிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை கணக்கியல் மற்றும் கணக்காய்வு தரநிலைகள் கண்காணிப்பு சபை (SLAAMB) மற்றும் Deloitte Touche Tohmatsu India LLP ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் கண்டுபிடிப்புகளைக் கோப் குழு ஆராய்ந்துள்ளது.
NDB வங்கியின் நிதி அறிக்கைகளில் உள்ள முறைகேடுகளை அடையாளம் காண உள்ளக கணக்காய்வாளர்கள் ஏன் தவறிவிட்டனர் என கோப் குழுவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர்.
நிறுவன முகாமை மற்றும் ஆபத்து முகாமைத்துவம் தொடர்பில் சிரேஷ்ட முகாமையின் பொறுப்புக்கூறலையும் குழுவினர் வலியுறுத்தினர்.
மோசடிக் கண்காணிப்பு
நிதி அமைப்பில் மோசடிகளைத் தடுப்பதற்காக மத்திய மோசடிக் கண்காணிப்பு அமைப்பொன்றை (centralized fraud monitoring system) நிறுவுவதில் LankaPay அடைந்துள்ள முன்னேற்றத்தைக் குழு மறுஆய்வு செய்தது.
ஒவ்வொரு வங்கியினுள்ளும் நிகழும் பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதற்கு வங்கி மட்டத்திலும் மோசடிக் கண்காணிப்பு அமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இக்கூட்டத்தில் பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் நிஷாந்த ஜயவீர ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, அஜித் அகலகட, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, எம்.கே.எம். அஸ்லம், சம்பிக ஹெட்டியாரச்சி மற்றும் லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும் கலந்துகொண்டனர்.