களுத்துறை மாணவி உயிரிழந்த சம்பவம்! தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை எடுத்துள்ள நடவடிக்கை
களுத்துறையில் 16 வயதான பாடசாலை மாணவி உயிரிழந்தமை மற்றும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கான செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கை கோரும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
கடந்த (07.05.2023) அன்று களுத்துறை பகுதியில் உள்ள ஐந்து மாடி விடுதி ஒன்றில் இருந்து வீழ்ந்து 16 வயதான மாணவி உயிரிழந்தமை, களுத்துறையில் மற்றுமொரு பகுதியில் 16 பாடசாலை மாணவர்கள் ஆசிரியரால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிக்கையை கோரியுள்ளது.
இதற்கமைய குற்றச் செயலின் தன்மை, அது தொடர்பில் நீதிமன்றுக்கு முன்வைக்கப்பட்டுள்ள சமர்ப்பணங்கள், தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரங்கள், அதில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அதற்கான காரணம் என்பன தொடர்பில் ஆராயப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் பொலிஸார் முன்னெடுக்கும் விசாரணைகளின் போது ஏதேனும் முறைக்கேடுகள் ஏற்படுமாயின் அது தொடர்பில் நீதிமன்றில் தங்களது தரப்பு சமர்ப்பணங்களை முன்வைக்க முடியும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |