சர்வகட்சி அரசாங்கத்தின் நோக்கம் இதுவே: அமைச்சர் நஸீர் அஹமட்டின் தகவல்
மக்களின் பிரச்சினைக்கு முக்கியமளிக்கும் நோக்குடன் தான், சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது. எனவே வெளியிலிருந்து விமர்சிப்பதையும், திரைமறைவில் சொகுசுகள் மற்றும் பதவிகள் பற்றி பேசுவதையும் நிறுத்த வேண்டும் என சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையின் முதலாவது நாளான நேற்று நாடாளுமன்றத்தில் விவாதத்தில் உரையாற்றுகையிலே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், “சர்வகட்சி அரசாங்கத்தில் பொருளாதார பிரச்சினைக்கு மட்டுமல்லாது, இனப்பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் சந்தர்ப்பம் உள்ளது.
ஜனாதிபதி தேர்தல்
நீண்ட கால அரசியல் அனுபவமுள்ள ரணில் விக்ரமசிங்க 134 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவானார்.
அனுரகுமார திஸாநாயக்கக்கு தேசிய மக்கள் சக்தியிலிருந்து மாத்திரம் புதிய ஜனாதிபதிக்கான வாக்குகள் கிடைக்கவில்லை. ஏனைய கட்சிகளிலிருந்து பரவலாக ஆதரவுகள் கிடைத்துள்ளன.
முஸ்லிம் தலைமைகளுக்கும் இது தெரியும். எனவே வெளியிலிருந்து விமர்சிப்பது, திரைமறைவில் சொகுசுகள் மற்றும் பதவிகள் பற்றி பேசுவதை இவர்கள் நிறுத்த வேண்டும்.
வெளிப்படையாக வந்து பொது வெளியில் பேசுவதுதான், பொறுப்புள்ள செயற்பாடாக அமையும். மேலும், நெருக்கடிகள் அதிகரித்த காலகட்டத்தில் ரணிலிடம் பதவிகளை ஒப்படைக்க தீர்மானித்தமை குறித்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சாணக்கியனிடம் தெரிவித்திருக்கிறார்.
முஸ்லிம் தலைமைகள்
சுமந்திரனின் உரையிலிருந்து இதைனை தெரிந்து கொள்ள முடிந்தது. இவ்வாறான உறவுகளைப் பேணி தங்கள் சமூகத்துக்கு எதனையாவது செய்யும் வியூகத்தை முஸ்லிம் தலைமைகளும் முன்மாதிரியாகக் கொள்வது அவசியம்.
முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை, மாவட்ட ரீதியாக அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள் உட்பட இனப்பிரச்சினை இன்னும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு, சர்வகட்சி அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க முஸ்லிம் தலைமைகள் முன்வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.